சிறுவாணி அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு


சிறுவாணி அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு
x

நீர்மட்டம் 45 அடியை தொடுவதற்கு முன்பாகவே சிறுவாணி அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. கேரள அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்


நீர்மட்டம் 45 அடியை தொடுவதற்கு முன்பாகவே சிறுவாணி அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. கேரள அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிறுவாணி அணை

கேரளவில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 45 அடிவரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க கேரள அரசு அனுமதி அளித்து உள்ளது.

ஆனால் நீர்மட்டம் 45 அடியை தொட கேரள அதிகாரி கள் விடுவது இல்லை. 40 அடி தாண்டிவிட்டாலே அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிடுவதை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

இந்த அணை தான் கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரம் ஆகும்.

எனவே தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், அணையின் நீர்மட்டத்தை 45 அடிவரை தேக்குமாறு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

தற்போது கேரளாவிலும், அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது.

மீண்டும் தண்ணீர் திறப்பு

இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 43 அடியை தாண்டியது.

இதற்கிடையே திடீரென்று கேரள அதிகாரிகள் அணையில் இருந்து தண்ணீரை நேற்று முன்தினம் திறந்து விட்டனர். இதனால் அணையின் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறி சிறுவாணி ஆற்றில் சென்று வருகிறது.

இந்த அணை முழு கொள்ளளவை எட்டினால்தான் கோவைக்கு ஒரு ஆண்டு முழுவதும் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் எடுக்க முடியும். ஆனால் அணை முழு கொள்ளளவை எட்டவிடாமல் கேரள அதிகாரிகள் தடுத்து, தொடர்ந்து அடாவடி செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து தமிழக குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

நீர்மட்டம் 43 அடி

சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 18 செ.மீட்டர் மழையும், அடிவாரத்தில் 16 செ.மீட்டர் மழையும் பெய்து உள்ளது. அணையின் நீர்மட்டம் 43 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருப் பதால் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தகவல் தெரிந்ததும் கேரள அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினோம். அதற்கு அவர்கள் 42 அடி வரைதான் தண்ணீரை தேக்குவோம் என்று கூறினர்.

நாங்கள் 45 அடிவரை தண்ணீரை தேக்கவும், தண்ணீரை அதிகமாக திறந்து விட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம். திறக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் நாங்கள் அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story