மாணவர்கள் பங்கேற்ற வாசிப்பு இயக்கம்


மாணவர்கள் பங்கேற்ற வாசிப்பு இயக்கம்
x
தினத்தந்தி 9 Sept 2023 2:45 AM IST (Updated: 9 Sept 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நடந்த வாசிப்பு இயக்கத்தில் மாணவர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

திண்டுக்கல்

உலகம் டிஜிட்டல் மயமாகி வருவதால், புத்தக வாசிப்பு என்பது வெகுவாக குறைந்து வருகிறது. எனவே இளைய தலைமுறையினரிடம் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் டட்லி பள்ளி மைதானத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை, புத்தக திருவிழா நடக்கிறது. இதையொட்டி புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் திண்டுக்கல் வாசிக்கிறது எனும் தலைப்பில் நேற்று வாசிப்பு இயக்கம் நடத்தப்பட்டது. அதன்படி, மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவ-மாணவிகளை குழுவாக ஒரே இடத்தில் அமர வைத்து புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.

அதையடுத்து மாணவ-மாணவிகள் அனைவரும் ஒரே நேரத்தில் புத்தகம் வாசித்து மகிழ்ந்தனர். மாணவர்கள் பாடப்புத்தகம் மட்டுமின்றி நூலகத்தில் இருந்து கதை, வரலாறு புத்தகங்களையும் எடுத்து வாசித்தனர். இதில் அரசு அதிகாரிகள், ஆசிரியர்களும் பங்கேற்றனர். அதேபோல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் வாசிப்பு இயக்கம் நடத்தப்பட்டது. அந்தவகையில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள் மதிய உணவு இடைவேளையில் கூட்ட அரங்கில் புத்தகம் வாசித்தனர்.


Related Tags :
Next Story