திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி
விஜயதசமியையொட்டி திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லிக்குப்பம்
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இந்த கோவிலில் நேற்று விஜயதசமி விழாவை யொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விஜயதசமி நாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம்.
மேலும் பள்ளிக்கூடங்களில் புதிதாக சேர்க்கப்படும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பதும் மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கல்விக்கு அதிபதியான சரஸ்வதி, லட்சுமி, ஹயக்ரீவர் ஆகிய சாமி சன்னதிகளுக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து சென்று பூஜை செய்து பள்ளிக்கூடங்களில் சேர்ப்பார்கள்.
அதன்படி திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் எதிரே அவுசதகிரி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஹயக்ரீவர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஹயக்ரீவருக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
ஹயக்ரீவர் சன்னதியில் வழிபாடு
இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கருப்பு பலகை, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை கொண்டு வந்து ஹயக்ரீவர் சன்னதியில் வைத்து வழிபட்டனர். பின்னர் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஹயக்ரீவர் சன்னதி முன்பு ஏடு படிக்கும் நிகழ்ச்சிக்காக தரையில் அரிசி மற்றும் நெல்லை கொட்டினர்.
பின்னர் அதில் தங்களது குழந்தைகளை தமிழில் அ..ஆ... என எழுத வைத்து பள்ளி படிப்பை ஆர்வத்துடன் தொடங்கி வைத்தனர். சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.