பூரண மது விலக்குக்காக எந்த கட்சியுடனும் சேர்ந்து போராட தயார்; வேல்முருகன் பேட்டி


பூரண மது விலக்குக்காக எந்த கட்சியுடனும் சேர்ந்து போராட தயார்; வேல்முருகன் பேட்டி
x

பூரண மது விலக்குக்காக எந்த கட்சியுடனும் சேர்ந்து போராட தயார் என்று வேல்முருகன் கூறினார்.

அரியலூர்

அரியலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி, சட்டமன்றத்தில் பேசி இருக்கிறேன். தமிழக முதல்-அமைச்சரும் அதை கண்டிப்பாக பரிசீலிப்பதாகவும், இட ஒதுக்கீடு கண்டிப்பாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஆனால் இதில் மிகப் பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட குழு ஆய்வு பணியை தொடங்கியுள்ளதாக முதல்-அமைச்சர் கூறியுள்ளார். அனைத்து சாதியினரையும் கணக்கெடுத்து அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

இல்லாவிட்டால் கடந்த ஆட்சியில் அவசர கதியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி, நீதிமன்றங்களால் தடை போட முடியாத வகையில் இந்த கல்வி ஆண்டிலேயே அவசர சட்டத்தை இயற்றி ஏழை, எளிய வன்னிய இன மாணவர்களின் கனவை நிறைவேற்ற வேண்டும்.தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும். அரசு விற்கிற மதுவாக இருந்தாலும், சாராயம் ஒரு சொட்டு கூட தமிழகத்தில் இருக்கக்கூடாது. அதற்காக யாரோடு வேண்டுமென்றாலும், தமிழகத்தில் எந்த கட்சியுடனும் சேர்ந்து, கைகோர்த்து போராட தயாராக இருக்கிறேன். அது பா.ம.க., அ.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, தி.மு.க.வாக இருக்கலாம்.

ஊழல் குற்றச்சாட்டுகளை அ.தி.மு.க., தி.மு.க. பல ஆண்டுகளாக கூறி வருகிறார்கள். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஊழல் அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய தண்டனை, சொத்துக்களை பறிமுதல் செய்ததற்கான வரலாறு இல்லை. அரசியல் காரணங்களுக்காக மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை சொல்லாமல், உண்மையிலேயே அதற்கான ஆவணங்கள், தரவுகள் இருந்தால், அதன் அடிப்படையில் இதை எதிர்கொள்ள வேண்டும். குறிப்பாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியலை ஆதாரங்களுடன் வெளியிடுவதாக கூறிவிட்டு, தி.மு.க.வின் முன்னாள், இந்நாள் அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டு இருக்கிறார். மோசடி வித்தைகளை மோடியின் வாரிசாக இருக்கின்றவர்கள் காட்டக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story