அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முழு ஆடியோவை கோர்ட்டில் வழங்க தயார் -அண்ணாமலை


அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முழு ஆடியோவை கோர்ட்டில் வழங்க தயார் -அண்ணாமலை
x

தி.மு.க.வின் 2-வது ஊழல் பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் 1 மணி நேர முழு ஆடியோவை கோர்ட்டில் வழங்க தயாராக இருப்பதாகவும் அண்ணாமலை பரபரப்பு பேட்டி அளித்தார்.

சென்னை,

தமிழ்நாடு பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அமைச்சரவை மாற்றத்தின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ஆவின் பாலின் பச்சை நிற பாக்கெட்டில் பாலின் கொழுப்பு சத்தை 4.5 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் நிகழ்த்தி உள்ளார். நாசர் மீது பல்வேறு பிரச்சினைகளை நாங்கள் மக்கள் மன்றத்தில் சொல்லி வந்த நிலையில், அவரது பதவி நீக்கத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

புதிதாக வருகின்ற அமைச்சராவது, தேர்தல் வாக்குறுதிபடி, பால் கொள்முதல் விலையை அதிகரித்து, நுகர்வோருக்கான விற்பனை விலையை குறைக்க வேண்டும். நிர்வாக செலவை முறையாக கட்டுப்படுத்தினால் மட்டுமே இதற்கு சாத்தியமாகும்.

நகைப்புக்கு உரியது

ஓ.என்.ஜி.சி., கெயில் நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் கியாஸை தங்களது தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் கொடுக்க வேண்டும் என்று டி.ஆர்.பாலு நிர்பந்தித்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பதிவாகி உள்ளது.

இவர் என் மீது அவதூறு வழக்கு தொடுத்து இருப்பது நகைப்புக்கு உரியதாக இருக்கிறது. என் மீது வழக்கு தொடுத்துள்ளதால் உங்கள் மீதான குற்றச்சாட்டு அதிகரிக்குமே தவிர குறையாது.

1 மணி நேர முழு ஆடியோ

நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று பாராட்டி வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது துறையை மாற்ற வேண்டிய காரணம் என்ன? ஆடியோ விவகாரம் வெளிவந்த ஒரே காரணத்துக்காக அவரது பதவியை மாற்றம் செய்து இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் அவர் தவறு செய்யவில்லை.

அவரது 1 மணி நேர முழு ஆடியோவை கோர்ட்டில் வழங்க தயாராக உள்ளேன். அது தடயவியல் துறைக்கு செல்ல வேண்டும். இன்னும் பல விஷயங்கள் வெளியாகும். பழனிவேல் தியாகராஜன் பகடைக்காயாக வேண்டாம் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் 3-வது ஆடியோ வெளியிடவில்லை. இதில் பழனிவேல் தியாகராஜன் தவறு செய்யவில்லை. தப்பு செய்தவர்கள் பற்றி அவர் பேசியிருக்கிறார். அதுகுறித்து தனி விசாரணை நடத்தப்பட்டு கோர்ட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.க. ஊழல் பட்டியல்-2

கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், கலாநிதி வீராசாமி, ஆர்.எஸ்.பாரதி என தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என் மீது ஆயிரத்து 461 கோடி ரூபாய் அவதூறு வழக்கு போட்டுள்ளனர். இந்தியாவிலேயே ஒரு தனிநபர் மீது ஒரு கட்சி சுதந்திரத்துக்கு பிறகு இதுவரை இவ்வளவு தொகைக்கு அவதூறு வழக்கு போடவில்லை.

தமிழகத்தில் பா.ஜ.க. எங்கு இருக்கிறது என்று ஒருகாலத்தில் கருணாநிதி கேள்வி கேட்டிருந்தார். இன்று, நீங்கள் ஆயிரத்து 461 கோடி ரூபாய் அவதூறு வழக்கு போடும் அளவிற்கு பா.ஜ.க. வளர்ந்து உள்ளது.

தி.மு.க. பைல்ஸ் பாகம்-2 (ஊழல் பட்டியல்) ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும். அதில் புதிய அமைச்சர்கள் உள்பட 21 பேரின் பட்டியல் வெளியாகும். பாகம் 3-ம் வெளியிடப்படும். என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்ததற்காக நாங்கள் அடங்கிவிடுவோம் என்று நினைக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, நாராயணன் திருப்பதி, சக்கரவர்த்தி, செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

'ஆருத்ரா வழக்கு குறித்து ஜூலை மாதம் சொல்கிறேன்'

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, "ஆருத்ரா வழக்கில், குற்றவாளியை அழைத்துச் சென்று 5 நாட்கள் நெம்பு நெம்பு என நெம்பினீர்கள் (துன்புறுத்தினீர்கள்). எப்படியாவது குற்றவாளியிடம் இருந்து ஒரு வாக்குமூலம் பெற்றுவிடலாம் என்று நினைத்தீர்கள். பத்திரிகைகளில் செய்திகளாக வெளியிட்டீர்கள். அதே ஆருத்ரா வழக்கு குறித்து ஜூலை மாதத்தில் நான் சொல்கிறேன். எந்த அமைச்சருக்கு ஆருத்ரா நிறுவனத்தில் இருந்து பணம் போய் இருக்கிறது என்று நான் சொல்கிறேன்.நானும் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி உள்ளேன். நான் சவால் விடுகிறேன். உங்களிடமும் அதே சி.ஐ.டி. போலீஸ் இருக்கிறது. ஆருத்ரா வழக்கை கை வையுங்கள் பார்ப்போம்" என்றார்.

மேலும், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பா.ஜ.க.வுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு 24 மணி நேரமும் பா.ஜ.க. அலுவலக கதவுகள் திறந்து இருப்பதாக தெரிவித்தார்.


Next Story