காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறுவதை தமிழகம் முழுவதும் செயல்படுத்தலாம் - மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்


காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறுவதை தமிழகம் முழுவதும் செயல்படுத்தலாம் - மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
x

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்தலாமே என்று மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.

மதுரை


காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்தலாமே என்று மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.

டாஸ்மாக் கடையை அகற்ற வழக்கு

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, பனைவயல் பகுதியை சேர்ந்த கலைராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

பனைவயல் கிராமத்தில் சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் கிராம மக்களின் விவசாயம் உள்ளிட்ட தண்ணீர் தேவையை இங்குள்ள அத்தாணி கண்மாய்தான் பூர்த்தி செய்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அத்தாணி கண்மாய் அருகில் டாஸ்மாக் மதுக்கடை தொடங்கப்பட்டது. அப்போது இந்த கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். இதன்காரணமாக அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

தற்போது அதே பகுதியில் புதிதாக 2 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த கடைகளுக்கு அருகில் 15 மீட்டர் தூரத்துக்குள் கோவில்கள் உள்ளன. இங்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் டாஸ்மாக் கடையினால் அவதிக்கு உள்ளாகின்றனர்.

விவசாயிகள் பாதிப்பு

மேலும் இந்த கடையின் அருகில் மது அருந்துபவர்கள் காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் போன்றவற்றை கண்மாய் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும் வீசுகின்றனர். இதனால் கண்மாயும், நிலங்களும் அசுத்தப்படுத்தப்படுகின்றன. பாட்டில்கள் உடைக்கப்படுவதால் விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே பனைவயல் கிராமத்தில் செயல்படும் 2 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பனைவயல் கிராமத்தில் டாஸ்மாக் கடைகளின் அருகில் கண்மாய், நிலங்களில் மதுபாட்டில்கள், காலி பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் போன்றவை வீசப்பட்டு கிடந்தது தொடர்பான புகைப்படங்கள் நீதிபதிகள் முன்பு சமர்ப்பிக்கப்பட்டன.

முழுமையாக அமல்படுத்தலாம்

அவற்றை பார்த்த நீதிபதிகள், காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் பல இடங்களில் அமல்படுத்தப்பட்டு உள்ளதே? அந்த திட்டம் ராமநாதபுரத்தில் அமலில் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு வக்கீல் திலக்குமார் ஆஜராகி, நீலகிரி மாவட்டத்தில் மட்டும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்தலாமே? என்று அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.


Next Story