பெற்றோரை பராமரிக்காத மகனுக்கு எழுதி கொடுத்த சொத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்து நடவடிக்கை


பெற்றோரை பராமரிக்காத மகனுக்கு எழுதி கொடுத்த சொத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்து நடவடிக்கை
x

பெற்றோரை பராமரிக்காத மகனுக்கு எழுதி கொடுத்த சொத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்து மூத்த குடிமக்களுக்கான தீர்ப்பாய தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கரூர்

வீட்டை எழுதி கொடுத்த தந்தை

கரூர் சின்ன ஆண்டான்கோவில் சாலை ராமானுஜம் நகர் தெற்கு குமரன் நகர் என் மார்பிலே அவுட்டை சேர்ந்தவர் பூவலிங்கம் (வயது 86). இவரது மனைவி பழனியம்மாள் (77). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் குமாரசாமி என்ற மகனும் உள்ளனர்.இந்நிலையில் பூவலிங்கம் கடந்த 2014-ம் ஆண்டு 2400 அடி அளவுள்ள தனது வீட்டினை குமாரசாமிக்கு எழுதிக் கொடுத்துள்ளார். வீட்டில் வசித்து வரும் குமாரசாமி முதல் தளத்தை ரூ.3 லட்சம் போகியத்திற்கும், 2-வது தளத்தை ரூ.8 ஆயிரத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

மனு

இந்நிலையில் குமாரசாமி பெற்றோரை பராமரிக்காததுடன் அவர்களை வீட்டைவிட்டு துரத்திவிட்டார். வாடகை வீட்டில் தனியாக வசிக்கும் பூவலிங்கம்-பழனியம்மாள் தம்பதி மகள்கள் இருவர் வழங்கும் தொகையில் வீட்டு வாடகை கொடுத்து கொண்டு குடும்பம் மற்றும் மருத்துவ செலவுகளை பார்த்து வந்துள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த பழனியம்மாள் கரூர் கோட்டாட்சியரும் மற்றும் மூத்த குடிமக்களுக்கான தீர்ப்பாயத்தின் தலைவரிடம் மகனுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை ரத்து செய்ய கோரியும், பராமரிப்பு தொகை பெற்று தருமாறு கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி மனு அளித்துள்ளார்.

பரிந்துரை

இதனை அடுத்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டத்தின் கீழ் அப்போதைய தீர்ப்பாய தலைவரான சந்தியா இதுகுறித்து பூவலிங்கம் மற்றும் பழனியம்மாள், குமாரசாமி ஆகியோரிடம் கடந்த மே மாதம் 10 மற்றும் 11-ந்தேதிகளில் விசாரணை நடத்தியுள்ளார் விசாரணையில், குமாரசாமி பெற்றோரின் பராமரிப்புச் செலவுக்கு மாதம்தோறும் ரூ.1,300 வழங்கி வருவதாகவும், அதனை ரூ.2 ஆயிரமாக அதிகரித்தது வழங்குவதாகவும் அதற்கு மேல் பணம் வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.இதனையடுத்து குமாரசாமிக்கு எழுதிக்கொடுத்த வீட்டை ரத்து செய்யக்கோரி பத்திரப்பதிவு செய்யப்பட்ட மேல கரூர் சார்பதிவாளர் அலுவலகம், மாவட்ட பதிவாளர் ஆகியோருக்கு அப்போதைய தீர்ப்பாய தலைவர் சந்தியா அண்மையில் பரிந்துரை செய்துள்ளார்.


Next Story