முடிவை மறுபரிசீலனை செய்க - சரத் பவாருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத்பவார் நீடிக்க வேண்டும் என அரசியில் கட்சியினர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த செவ்வாய்க்கிழமை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது அறிவிப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீடிக்க சரத்பவார் வேண்டும் என அரசியில் கட்சியினர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை சரத் பவார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"நாடாளுமன்ற தேர்தலை மையமாக கொண்டு தேசிய அரசியல் உள்ளது. இந்தியாவில் மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதில் முக்கியமான பங்குவகிப்பவர் சரத் பவார். எனவே நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை சரத் பவார் மறுபரிசீலனை செய்ய வேண்டும். முடிவை மறுபரிசீலனை செய்து தேசியவாத காங்கிரஸ் தலைவராக அவர் நீடிக்க வேண்டும், தொடர்ந்து கட்சியை வழிநடத்த வேண்டும்." என்று பதிவிட்டுள்ளார்.