'காதல் கணவரை மீட்டுத்தாருங்கள்'
திருமணமான 8 மாதத்தில் காரில் கடத்தி சென்ற காதல் கணவரை மீட்டுத்தரக்கோரி கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம், திருநங்கை புகார் அளித்துள்ளார்.
கோவை
திருமணமான 8 மாதத்தில் காரில் கடத்தி சென்ற காதல் கணவரை மீட்டுத்தரக்கோரி கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம், திருநங்கை புகார் அளித்துள்ளார்.
கமிஷனரிடம் புகார்
ஈரோட்டை சேர்ந்தவர் மாளவிகா (வயது 22). திருநங்கையான இவர் நேற்று காலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் கமிஷனரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
என்ஜினீயரிங் பட்டதாரியான நான் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை செய்து வருகிறேன். நான் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருப்பூரில் இருந்தபோது கோவை பீளமேடு பகுதியில் வசித்து வந்த கபடி பயிற்சியாளர் மணிகண்டன் (23) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.
மாலை மாற்றி திருமணம்
நாங்கள் இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் எங்களது காதலை வளர்த்து வந்தோம். இதனால் நாங்கள் 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்து, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருநங்கைகள் முன்னிலையில் மருதமலையில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டோம். பின்னர் கோவையை அடுத்த ஒத்தக்கால்மண்டபத்தில் வீடு எடுத்து தங்கி இருந்தோம். பின்னர் எனது கணவரை காணவில்லை என்று கணவரின் பெற்றோர் பீளமேடு போலீசில் புகார் செய்து இருந்தனர். போலீசார் விசாரணை நடத்தியபோது, நாங்கள் ஒத்தக்கால் மண்டபத்தில் இருப்பது தெரியவந்தது. எனவே அவர்கள் எங்களை விசாரணைக்கு அழைத்தனர்.
கணவரை கடத்தி சென்றனர்
அப்போது நாங்கள் 2 பேரும் பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக சென்றோம். பின்னர் போலீஸ் நிலையத்தைவிட்டு எனது கணவர் வெளியே சென்றபோது, கணவரின் உறவினர்கள் அவரை காரில் கடத்திச்சென்றுவிட்டனர்.
இது தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோதும் அவர்கள் சரியான பதிலை தெரிவிக்கவில்லை. இதனால் எனது காதல் கணவருக்கு என்ன ஆனது என்பது இதுவரை எனக்கு தெரியவில்லை. அவருடைய செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு உள்ளது. எனவே தாங்கள் உடனடி நடவடிக்கை எடுத்து எனது காதல் கணவரை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட கமிஷனர், இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.