தேனி அருகே மீட்கப்பட்டஅரசு நிலத்துக்கு வேலி அமைக்க எதிர்ப்பு:அதிகாரிகள் பேச்சுவார்த்தை
தேனி அருகே மீட்கப்பட்ட அரசு நிலத்துக்கு வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அரசு நிலம் அபகரிப்பு
பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு நிலங்களை சிலர் அதிகாரிகள் துணையுடன் அபகரித்ததாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் அரசு நடத்திய விசாரணையில், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர், தாமரைக்குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலங்கள் அரசு அதிகாரிகளின் துணையுடன் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது.
இதற்கு உடந்தையாக இருந்த 2 தாசில்தார்கள் உள்பட 7 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மோசடியாக வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் அந்த நிலங்கள் அரசு நிலங்களாக மாற்றப்பட்டன. அந்த நிலங்களுக்கு பட்டா பெற்றிருந்த சிலர் அவற்றை பலருக்கும் விற்பனை செய்து இருந்தனர். அந்த பட்டாக்களை ரத்து செய்யவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இந்த அரசு நிலம் அபகரிப்பு தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர்.
வேலி அமைக்க எதிர்ப்பு
இந்நிலையில், அரசு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மீட்கப்பட்ட நிலங்களை சுற்றி வேலி அமைக்க வருவாய்த்துறையினர் முடிவு செய்தனர். அதற்காக, வடவீரநாயக்கன்பட்டி வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட, தேனி ஆயுதப்படை வளாகத்தில் இருந்து வடபுதுப்பட்டி செல்லும் சாலையோரம் உள்ள இடத்தை சுற்றி வேலி அமைக்கும் பணிகள் நேற்று தொடங்கின.
இதற்காக பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து தலைமையில், தாசில்தார் காதர்ஷெரீப் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு வந்தனர் வேலி அமைக்கும் பணிக்காக கற்களை நடவு செய்ய குழிகள் தோண்டப்பட்டன. அப்போது அப்பகுதியில் நிலம் வாங்கிய மக்கள் சிலர் அங்கு வந்தனர்.
அவர்கள் தாங்கள் அந்த பகுதியில் நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்து இருப்பதாகவும், கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டு இருக்கும் சூழலில் வேலி அமைக்கக்கூடாது என்றும் கூறி வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஒத்திவைப்பு
பின்னர், போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் அங்கு வந்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தொடர்ந்து அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேலி அமைக்கும் பணியை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். பின்னர், அந்த மக்கள் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கோரிக்கை மனு கொடுத்தனர்.