மேட்டூர் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டமுன்னாள் போலீஸ்காரர் பிணமாக மீட்பு
மேட்டூர் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முன்னாள் போலீஸ்காரர் பிணமாக மீட்கப்பட்டார்.
மேட்டூர்
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூர் பகுதியை சேர்ந்தவர் துரைமுருகன் (வயது 31). இவர் காவல் துறையில் பணியாற்றி வந்த போது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது காவல்துறை பணியில் இல்லை. இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் நண்பர்களுடன் துரைமுருகன் குளிக்க சென்றார். அப்போது அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேட்டூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் 2 நாட்களாக துரைமுருகனை தேடியும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் 3-வது நாளாக நேற்று அவரை தேடும் பணி நடைபெற்றது. அப்போது அவரது உடல் காவிரி ஆற்றில் மிதப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று துரைமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த துரைமுருகனுக்கு மீனா என்ற மனைவியும், தரணிஸ்ரீ, மித்ராஸ்ரீ என்ற 2 மகள்களும் உள்ளனர்.