கிணற்றில் குளித்தவர் பிணமாக மீட்பு


கிணற்றில் குளித்தவர் பிணமாக மீட்பு
x

கிணற்றில் குளித்தவர் பிணமாக மீட்கப்பட்டார்.

பெரம்பலூர்

பாடாலூர்:

குளிக்க சென்றனர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெரணி காந்தி நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் முருகேசன் (வயது 23). இவரும், அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர்களான மருதையின் மகன் சாமிநாதன் (25), தொப்புளானின் மகன் விக்னேஷ் (23) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் மதியம் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்கள் குளிப்பதற்காக அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்கு சென்றனர். அப்போது சாமிநாதனும், விக்னேசும் மது போதையில் கிணற்றின் அருகே தூங்கி விட்டனர். முருகேசன் அவரது சட்டை, லுங்கி, காலணி ஆகியவற்றை கழற்றி வைத்து விட்டு கிணற்றில் குளித்தார். பின்னர் கிணற்றில் இருந்து அவர் மேலே வரவில்லை.

பிணமாக மீட்பு

இந்த நிலையில் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சாமிநாதனும், விக்னேசும் இதுகுறித்து ஊருக்குள் சென்று தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து முருகேசன் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கிணற்றுக்கு வந்து பார்த்தனர். பின்னர் இதுகுறித்த தகவலின் பேரில் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

அதனை தொடர்ந்து பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, கிணற்றில் இருந்து முருகேசனை பிணமாக மீட்டனர். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகேசனுக்கு கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணமாகி பிரியா என்ற மனைவியும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story