ஆரோவில்லில் சோழர் கால 3 சிலைகள் மீட்பு: ஜெர்மனி தம்பதியிடம் விசாரணை
ஆரோவில்லில் பதுக்கி வைத்திருந்த சோழர் கால 3 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஜெர்மனி தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் அனுமதியின்றி சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ஆரோவில்லுக்கு விரைந்து வந்தனர்.
ஆரோவில்லில் யாத்ரா கம்யூனிட்டியில் உள்ள ஒரு வீட்டில் சோதனையிட்டபோது, அங்கு சோழர் கால நடராஜர், அம்மன், சந்திரசேகரர் ஆகிய 3 சிலைகள் பதுக்கி வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
3 சிலைகள் பறிமுதல்
இதுதொடர்பாக அந்த வீட்டில் வசித்து வந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த பாப்பே பிஸ்கல், அவரது மனைவி மோனா டாக்டர் பிங்கல் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் அந்த சிலைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும் சோதனைக்கு அந்த தம்பதியினர் முறையாக ஒத்துழைப்பு அளிக்காமல் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 3 சிலைகளையும் போலீசார் பறிமுதல் செய்து கும்பகோணத்துக்கு எடுத்துச் சென்றனர். இந்த சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தம்பதியிடம் விசாரணை
இந்த சிலைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டவை, எதற்காக பதுக்கி வைத்திருந்தார்கள்? என்பது குறித்து ஜெர்மனி தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட நடராஜர் சிலை 50 செ.மீ. உயரமும், அம்மன் சிலை 56 செ.மீ உயரமும், சந்திரசேகரர் சிலை 45 செ.மீ. உயரமும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.