வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்பு
கோவில்பட்டி அருகே வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு கணேஷ் நகரைச் சேர்ந்த காளிமுத்து மகன் அழகுமாரிச்செல்வம் (வயது 19). கூலி வேலை செய்து வந்தார். இவர் கடந்த 10-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அழகுமாரியப்பன் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை. இதை தொடர்ந்து அவரது தந்தை காளிமுத்து 12-ந்தேதி கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன வாலிபரை தேடிவந்தனர்.
இந்நிலையில், நேற்று மந்தித்தோப்பு சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் அவர் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையிலான வீரர்கள் கிணற்றில் இறங்கி அவரது சடலத்தை மீட்டனர். பினனர் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரிகண்ணன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அவர் இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.