ஆக்கிரமிப்பு செய்த நீர்நிலை ஆதார குளம் மீட்பு
திருவாரூர் நகரில் தனியார் ஆக்கிரமிப்பு செய்த நீர்நிலை ஆதார குளத்தை மீட்க நடவடிக்கை எடுத்த கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் பாராட்டினர்.
திருவாரூர் நகரில் தனியார் ஆக்கிரமிப்பு செய்த நீர்நிலை ஆதார குளத்தை மீட்க நடவடிக்கை எடுத்த கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் பாராட்டினர்.
சாமியார் குளம்
திருவாரூர் நகர பகுதியில் ராம்கே ரோட்டில் 50 ஆண்டுகளாக சாமியார் குளம் நீர்நிலை ஆதாரமாக உள்ளது. இதை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து பொக்லின் எந்திரம் மூலம் பணிகள் நடந்து வந்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் எந்தவித பயனும் இல்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த வழியாக நேற்று வனத்துறை மூலம் தனியார் பள்ளி ஒன்றில் மரம் நடும் விழாவிற்கு கலெக்டர் சாருஸ்ரீ மற்றும் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நீர் நிலையாக பயன்படுத்தி வந்த குளத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் அளித்தனர். அதையடுத்து கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. அந்த குளத்தை பார்வையிட்டனர். அப்போது குளத்தில் இருந்த பொக்லின் எந்திரத்தை உடனடியாக வெளியேற்றி, வருவாய்த்துறை அலுவலர்களுடன் குளத்தை ஆய்வு செய்து மீட்க உத்தரவிட்டார்.
மீட்பு
அதன்படி உதவி கலெக்டர் சங்கீதா மேற்பார்வையில் தாசில்தார் நக்கீரன், மண்டல துணை தாசில்தார் இளங்கோவன் மற்றும் நிலஅளவை அலுவலர் சாமியார் ஆகியோர் குளத்தின் வரைபடம், பட்டா, நிலஅளவு ஆகியவற்றை சரிபார்த்து உடன் குளத்தை மீட்டனர்.
அப்போது நகர் மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், நியமனக்குழு உறுப்பினர் வாரை பிரகாஷ், நகர்மன்ற உறுப்பினர் ஐஸ்வர்யா பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர். இதையடுத்து நீர்நிலை குளத்தை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுத்த கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.வுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்தனர்.