தொண்டி பேரூராட்சிக்கு சொந்தமான நிலம் மீட்பு


தொண்டி பேரூராட்சிக்கு சொந்தமான நிலம் மீட்பு
x
தினத்தந்தி 22 May 2023 12:15 AM IST (Updated: 22 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொண்டி பேரூராட்சிக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது.

ராமநாதபுரம்

தொண்டி,

தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 50 சென்ட் நிலம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது. இந்த இடத்தில் பேரூராட்சி சமுதாயக்கூடம் கட்டப்பட்டு அதில் தற்போது ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. அந்தக் கட்டிடத்தில் தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது. ஆனால் அந்த நிலம் 1984-ம் ஆண்டு நத்தம் சர்வே நடைபெற்ற போது தனியார் ஒருவருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பேரூராட்சியின் சார்பில் வழக்கு தொடரப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்தது.

தற்போது உள்ள பேரூராட்சி நிர்வாகம் பொறுப்பேற்றதைதொடர்ந்து பேரூராட்சி தலைவராகிய நான், கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளை நேரில் அணுகி உரிய ஆவணங்களின் அடிப்படையில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வலியுறுத்தப்பட்டதின் பேரில் தற்போது மாறுதலாகி சென்றுள்ள கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உரிய விசாரணைகள் நடத்தியதுடன் ஆவணங்கள் அடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து அதன் உண்மை தன்மையை கண்டறிந்து தற்போது 50 சென்ட் நிலத்தை மீண்டும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பட்டா வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் கடந்த 40 ஆண்டு கால பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 50 சென்ட் நிலத்தின் இன்றைய மதிப்பு சுமார் ரூ.20 கோடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும் வருவாய்துறைக்கும் தொண்டி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவருடன் பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம், பேரூராட்சி துணைத்தலைவர் அழகு ராணி ராஜேந்திரன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story