கோவிலுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு
திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு
திட்டச்சேரி:
திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலம் திருவாரூர் மாவட்டம் சலிப்பேரி கிராமத்தில் உள்ளது. இந்த கோவில் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதால் அந்த இடத்தை மீட்கக்கோரி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் உதவி ஆணையர் ராணி தலைமையில், தனி தாசில்தார் (ஆலய நிலங்கள்) அமுதா, கோவில் செயல் அலுவலர் குணசேகரன், சரக ஆய்வாளர் சதிஷ், கோவில் பணியாளர் மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர். கிராம மக்கள் ஒத்துழைப்புடன், ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து கோவில் நிலம் மீட்கப்பட்டு, அந்த இடத்தில் இது கோவிலுக்கு சொந்தமான இடம் என்று பதாகை வைக்கப்பட்டது. மேலும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதேபோல திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலின் குழுக்கோவிலான மருங்கூர் கிராமத்தில் உள்ள சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்பிலான இடத்தை ஆக்கிரமித்து அதில் மளிகைக்கடை நடத்தி வந்தவரிடம் இருந்து கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.