ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலம் மீட்பு
ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலம் மீட்பு
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பஸ் நிலையம் எதிரே வருவாய்த்துறையினருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து சிலர் காய்கறி கடை நடத்தி வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக 9 வியாபாரிகளுக்கு, 15 நாட்களுக்குள் கடைகளை காலி செய்ய வருவாய்த்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. மேலும் தொடர்ந்து 2 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில் 7 வியாபாரிகள் தங்களது கடைகளை தாங்களாகவே அகற்றிக்கொண்டனர். அந்த நிலத்தில் கிணத்துக்கடவு வருவாய் ஆய்வாளர் கோபிலதா தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் விமல்மாதவன், திருநாவுக்கரசு, வாசுதேவ், செல்வகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, அறிவிப்பு பலகையை வைத்தனர். இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறும்போது, கிணத்துக்கடவு பஸ் நிலையம் எதிரே வருவாய்த்துறையினருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 25 சென்ட் பரப்பளவில் 9 கடைகள் இருந்தன. முதற்கட்டமாக 7 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உடனடியாக காலி செய்யப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மீதமுள்ள 2 கடைகளுக்கு வருகிற 14-ந் தேதியுடன் அவகாசம் முடிகிறது. அதன்பிறகு ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால், அந்த 2 கடைகளையும் நாங்களே அகற்றுவோம் என்றனர்.