வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.11 கோடி மதிப்பிலான சொத்து மீட்பு
வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.11 கோடி மதிப்பிலான சொத்து கோவில் வசம் மீட்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 16 ஆயிரம் சதுரடி பரப்பிலான குளம் பாலகிருஷ்ணன் தெருவில் அமைந்துள்ளது. இந்த குளத்தை சுற்றி கடந்த 20 ஆண்டுகளாக 26 நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். ஆக்கிரமிப்பு செய்திருந்த நபர்கள் மீது சென்னை இணை ஆணையர் (மண்டலம்-1) சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு கோவில் வசம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.11 கோடியாகும்.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டல உதவி ஆணையர் எம்.பாஸ்கரன், வட்டாட்சியர் (ஆலய நிர்வாகம்) காளியப்பன், ஆய்வாளர்கள் சம்பத், மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.