பாடி அருகே கோவிலுக்கு சொந்தமான ரூ.2½ கோடி நிலம் மீட்பு


பாடி அருகே கோவிலுக்கு சொந்தமான ரூ.2½ கோடி நிலம் மீட்பு
x

பாடி அருகே அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.2½ கோடி நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

சென்னை

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 32 ஏக்கர் நிலம் உள்ளன. இவை அனைத்தும் தற்போது முறையாக பராமரிக்கப்பட்டும், தனியாருக்கு வாடகைக்கு விடப்படும் வருகிறது. அதில் சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை பாடி அடுத்த பிரிட்டானியா அருகே உள்ள 8,400 சதுர அடி இடமானது லட்சுமணன் என்பவருக்கு கடந்த 50 வருடங்களுக்கு முன்பு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த இடத்தில் லட்சுமணன் தனது குடும்பத்திற்கு 2 வீடுகள் கட்டிக்கொண்டு மற்ற இடத்தில் கடைகளை கட்டி மேல் வாடகைக்கு விட்டு பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பல வருடங்களாக கோவிலுக்கு வாடகை செலுத்தாமல் ரூ.2 கோடிக்கு மேல் பாக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த வழக்கில் கடந்த 2016-ம் ஆண்டு நிலத்தை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தாருக்கு பலமுறை கோவில் சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆனாலும் நிலுவைத் தொகையை செலுத்தாமல் அவர்கள் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டல இணை கமிஷனர் ரேணுகாதேவி உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் பாஸ்கரன், செயல் அலுவலர் குமரேசன், அம்பத்தூர் மண்டல வருவாய் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று முதற்கட்டமாக அங்கு இருந்த கடைகளை அகற்றி ரூ.2½ கோடி மதிப்புள்ள இடத்தை மீட்டனர். மேலும் அவர்கள் தங்கி இருக்கும் வீடு மற்றும் காலி இடத்தை ஒப்படைக்க ஆக்கிரமிப்பினர் அவகாசம் கேட்டனர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. நிலம் ஒப்படைக்காத பட்சத்தில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் போலீஸ் உதவியுடன் அவர்கள் வெளியேற்றப்பட்டு மீதமுள்ள இடம் மீட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இடத்தின் மதிப்பு ரூ.6 கோடியே 30 லட்சம் என கூறப்படுகிறது.


Next Story