கொளப்பாக்கத்தில் ரூ.20 கோடி கோவில் நிலம் மீட்பு - இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை


கொளப்பாக்கத்தில் ரூ.20 கோடி கோவில் நிலம் மீட்பு - இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை
x

கொளப்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த ரூ.20 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சென்னை

சென்னை, ஆலந்தூர் வட்டம், மணப்பாக்கம் குழலி அம்மன் என்ற கோலியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 85 சென்ட் இடம் கொளப்பாக்கத்தில் அமைந்துள்ளது. இந்த நிலத்தை 12 ஆண்டுகளாக தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து கால்நடைகளை வளர்த்து பால்பண்ணை நடத்தி வந்துள்ளார்.

இந்த இடம் கோவிலுக்கு சொந்தமான இடம் என கண்டறியப்பட்டு, தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியர் கோவில் செயல் அலுவலர் சக்தி, தக்காராக நியமனம் செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து சென்னை மாவட்ட உதவி ஆணையர் எம்.பாஸ்கரன் முன்னிலையில் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகியோரின் உதவியோடு இச்சொத்து ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.20 கோடியாகும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story