மாணவியிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.34 ஆயிரம் மீட்பு
நாகையில் ஆன்லைன் மூலம் மாணவியிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.34 ஆயிரம் மீட்கப்பட்டது.
கீழ்வேளூர் பட்டமங்கலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த மனோகர் மகள் கீர்த்தனா (வயது22). தனியார் கல்லூரி மாணவி. சம்பவத்தன்று இவரது போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் தான் உங்களது உறவினர் பேசுவதாகவும், மருத்துவ செலவுக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், ஓரிரு நாட்களில் திருப்பி தருவதாகவும் கூறி உள்ளார். இதை நம்பிய கீர்த்தனா கூகுள் பேய் மூலமாக 4 தவணைகளில் ரூ.34 ஆயிரத்தை, அவரது வங்கி கணக்கில் அனுப்பி உள்ளார். இதையடுத்து பணத்தை திருப்பி கேட்பதற்காக கீர்த்தனா, சம்பந்தப்பட்ட நபருக்கு போன் செய்தபோது சுவிட்ச் ஆப் ஆக இருந்தது.இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கீர்த்தனா நாகை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து ரூ.34 ஆயிரத்தை மீட்டனர். இந்த பணத்தை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், கீர்த்தனாவிடம் ஒப்படைத்தார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, சப் -இன்ஸ்பெக்டர் திருக்குமரன் உள்பட போலீசார் உடன் இருந்தனர்