கடந்த 15 மாதங்களில் ரூ.3,566 கோடி கோவில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்
கடந்த 15 மாதங்களில் 3,566 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறினார்.
சென்னை,
2021-22 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கான மானிய கோரிக்கையின்போது சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் பணிமுன்னேற்றம் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடந்தது.
கூட்ட முடிவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
அனைத்து கோவில்களிலும் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அந்த பணியை மேற்கொண்டு வருகிறோம். சுமார் 1,500 கோவில்களில் 1,000 கோடி ரூபாய் அளவில் திருப்பணிகள் மேற்கொள்ள அதற்குண்டான ஒப்புதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கோவில் நிலங்கள் மீட்பு
கடந்த 15 மாதங்களில் 310 கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. 3 ஆயிரத்து 118 ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி 2 ஆயிரத்து 710 ஏக்கர் நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
இதன் மதிப்பு சுமார் 3,566 கோடி ரூபாய் ஆகும். எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு தற்போது 48 முதல் நிலை கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்தோம்.
12 அம்மன் கோவில்களில் பவுர்ணமி தோறும் ஒவ்வொரு கோவிலிலும் 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்கின்ற திருவிளக்கு பூஜை நடந்து கொண்டிருக்கின்றது. அதனை மேலும் விரிவுபடுத்துவது, அந்த விளக்கு பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
காசி யாத்திரை
மகாசிவராத்திரி விழா முதன் முதலில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பாக நடத்தப்பட்டது. இதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில், கோவை பட்டீஸ்வரர், தஞ்சை பெரிய கோவில், சென்னை கபாலீஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ஆகிய 5 இடங்களில் இந்த ஆண்டு சிவராத்திரி அன்று மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக இரவு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு ஆண்டுக்கு 200 பேர் யாத்திரையாக அனுப்பி வைப்பது குறித்தும், பாம்பாட்டி சித்தருக்கு சங்கரன்கோவிலில் விழா எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள், ஹரிப்பிரியா மற்றும் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.