ராணுவ வீரர் இழந்த ரூ.4¼ லட்சம் மீட்பு
கோவையில் ஆன்லைன் மூலம் ராணுவ வீரரிடம் மோசடி செய்த ரூ.4¼ லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.
கோவையில் ஆன்லைன் மூலம் ராணுவ வீரரிடம் மோசடி செய்த ரூ.4¼ லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.
ஆன்லைன் மோசடி
கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் செல்வமணி (வயது 30). ராணுவ வீரர். இவருக்கு டெலிகிராம் எனும் செயலி மூலம் ஆமதாபாத் நகரை சேர்ந்த கார்த்திக் பஞ்சல் என்பவர் அறிமுகம் ஆனார். அவர், தான் பங்கு சந்தை வர்த்தகம் செய்வதாகவும், அதில் முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதை நம்பிய செல்வமணி ஆன்லைன் மூலம் கார்த்திக் பஞ்சல் கூறிய வங்கி கணக்கில் ரூ.4 லட்சத்து 31 ஆயிரத்து 50 செலுத்தி உள்ளார். அதன்பிறகு அவர், அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றார்.
ஆனால் செல்போனை சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.
வங்கி கணக்கு முடக்கம்
அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் விரைந்து செயல்பட்டு கார்த்திக் பஞ்சலின் வங்கி கணக்கை முடக்கினர். பின்னர் உரிய ஆவணங்களை காண்பித்து கார்த்திக் பஞ்சலின் வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 50 மீட்டு, செல்வமணியிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், செல்போனில் தொடர்பு கொண்டு அதிகம் சம்பாதிக்க ஆன்லைன் வர்த்தகம், பங்கு சந்தை, பகுதி நேர வேலை என்று கூறினால், அதை நம்பி பொதுமக்கள் யாரும் பணத்தை செலுத்த வேண்டாம்.
மேலும் வங்கியில் இருந்து பேசு வதாக கூறி ஏ.டி.எம். ரகசிய எண், ஒ.டி.பி. எண் கேட்டாலும் கூறக் கூடாது. ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி ஏமாந்தால் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் அவசர உதவி எண்ணில் புகார் செய்தால் உரிய நடவடிக்கை எடுத்து பணம் மீட்டு தரப்படும் என்றார்.