உத்தமர்கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்பு
உத்தமர்கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்கப்பட்டது.
கொள்ளிடம் டோல்கேட்:
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உத்தமர்கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி பிச்சாண்டார்கோவில் ஊராட்சி, ராகவேந்திரா நகரில் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.5 கோடி மதிப்பிலான உத்தமர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மாவட்ட உதவி ஆணையர் லட்சுமணன் தலைமையில், அந்தநல்லூர் சரக இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கோகிலாவாணி, உத்தமர்கோவில் செயல் அலுவலர் சிதம்பரம், பிச்சாண்டார்கோவில் கிராம நிர்வாக அலுவலர் ஜோதிமலர் ஆகியோர் மேற்பார்வையில் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ஊழியர்கள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோவில் நிலத்தை மீட்டு எச்சரிக்கை பலகை வைத்தனர். இதையொட்டி சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் கொள்ளிடம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.