பங்கு சந்தை மோசடியில் இழந்த ரூ.5 லட்சம் மீட்பு
பங்கு சந்தை மோசடியில் இழந்த ரூ.5 லட்சத்தை மீட்டு ஈரோடு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
பங்கு சந்தை மோசடியில் இழந்த ரூ.5 லட்சத்தை மீட்டு ஈரோடு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
பங்கு சந்தை
கோபி வேட்டைகாரன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருக்கு அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் கடந்த மாதம் 15-ந்தேதி செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அந்த நபர், தான் பங்கு சந்தை நிறுவனம் நடத்தி வருவதாகவும், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் பெற்று தருவதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளார்.
இதனை உண்மை என நம்பிய பாலசுப்பிரமணியம் அந்த நபர் அளித்த வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகள் மூலம் மொத்தம் ரூ.5 லட்சம் வரை தன் வங்கி கணக்கில் இருந்து அனுப்பி உள்ளார். பணத்தை பெற்ற சில நாட்களில் அந்த மர்மநபரை மீண்டும் செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து பாலசுப்பிரமணியம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகரிடம் புகார் அளித்தார்.
உதவி எண்
இதைத்தொடர்ந்து அவர், இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் சந்தேக நபரின் வங்கி கணக்கினை முடக்கி, பாலசுப்பிரமணியத்தின் ரூ.5 லட்சத்தை மீட்டனர். இதையடுத்து ஈரோடு சைபர் கிரைம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன் முன்னிலையில், மீட்கப்பட்ட ரூ.5 லட்சத்துக்கான காசோலையை பாலசுப்பிரமணியத்திடம் நேற்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வழங்கினார்.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறும்போது, 'ஆன்லைன் மோசடி மூலம் பணம் இழப்பு ஏற்பட்ட உடனடியாகவோ அல்லது 24 மணி நேரத்திற்குள்ளாகவோ சைபர் கிரைம் உதவி எண் 1930-க்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கும்பட்சத்தில் இழந்த பணம் மீட்டு தரப்படும். பொதுமக்கள் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து அல்லது தெரியாத செல்போன் எண்களிலிருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி எந்த விவரங்களையும் பதிவு செய்ய வேண்டாம். ஆன்லைனில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பணத்தை இழந்து விட வேண்டாம்' என்றார்.