கோவில்களுக்கு சொந்தமான ரூ.5,171 கோடி சொத்துகள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்


கோவில்களுக்கு சொந்தமான ரூ.5,171 கோடி சொத்துகள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்
x

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இதுவரை தமிழக கோவில்களுக்கு சொந்தமான ரூ.5,171 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஆக்கிரமிப்பிலிருந்து கோவில் நிலங்கள் மீட்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 2021 மே 7-ந்தேதி முதல் 2022 மார்ச் 31-ந்தேதி வரை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 167 கோவில்களின் ரூ.2,566.94 கோடி மதிப்பிலான சொத்துகள் குறித்த விவரங்களை தொகுத்து, முதல் புத்தகம் வெளியிடப்பட்டது.

அதனை தொடர்ந்து, 2022 ஏப்ரல் 1-ந்தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரையிலான காலத்தில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட கோவில் சொத்துகளின் விவரம் அடங்கிய 2-வது புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டார்.

இந்த புத்தகத்தில் 01.04.2022 முதல் 31.03.2023 வரையிலான காலத்தில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 330 கோவில்களுக்குச் சொந்தமான ரூ.1,692.29 கோடி மதிப்பிலான 3386.06 ஏக்கர் நிலம், மனை, கட்டிடம் மற்றும் தெப்பக்குளம் விவரங்கள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

ரூ.5 ஆயிரம் கோடி சொத்துகள்

இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-

இந்த புத்தகங்கள் எதிர்காலத்தில் கோவில்களின் சொத்துகளை பாதுகாக்க அடிப்படை ஆதாரமாக விளங்கும். கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கும் பணிகளும், தனிநபர் பெயரிலும், கணினி சிட்டாவிலும் தவறுதலாக பதிவான பட்டா மாறுதல்களை சரிசெய்து கோவில்கள் பெயரில் மீண்டும் பட்டா மாறுதல் செய்யும் பணிகளும் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஒட்டுமொத்தமாக, கடந்த 2021 மே 7-ந்தேதி முதல் இந்த மாதம் 7-ந்தேதி வரை 653 கோவில்களுக்கு சொந்தமான ரூ.5,171 கோடி மதிப்பீட்டிலான 5,721.19 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும், நவீன தொழில்நுட்ப கருவியான ரோவர் மூலம் 1,48,956.20 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்து பாதுகாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், அறநிலையத்துறை கமிஷனர் க.வீ.முரளீதரன், கூடுதல் கமிஷனர்கள் அ.சங்கர், ந.திருமகள், சி.ஹரிப்ரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story