கோவில்களில் திருடப்பட்ட சாமி சிலைகள் மீட்பு; 2 பேர் கைது


கோவில்களில் திருடப்பட்ட சாமி சிலைகள் மீட்பு; 2 பேர் கைது
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில்களில் திருடப்பட்ட சாமி சிலைகள் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் வாகன சோதனையின்போது சிக்கினர்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில்களில் திருடப்பட்ட சாமி சிலைகள் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் வாகன சோதனையின்போது சிக்கினர்.

தனிப்படை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கோவில்களில் உள்ள சாமி சிலைகள், சிலைகளில் உள்ள நகைகள் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின்படி, துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

திருட்டுப்போன இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வாகன சோதனை

இந்த நிலையில் குத்தாலம் அருகே திருமங்கலம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தனிப்படை போலீசார் மற்றும் குத்தாலம் போலீசார் ஆகிய இருவரும் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் கோவில்களில் சாமி சிலைகளுக்கு அணிவிக்கப்படும் தங்க நகைகள் இருந்தன.

சாமி சிலைகள் மீட்பு

இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் குத்தாலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மயிலாடுதுறை அருகே உள்ள கடலங்குடியை தெற்கு கார்குடியைச் சேர்ந்த கார்த்திகேயன்(வயது 38), தஞ்சை மாவட்டம் இடையநல்லூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாஸ்கர்(42) என்பதும், இவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் சாமி சிலைகள் மற்றும் நகைகளை திருடியதும் தெரிய வந்தது.இதை தொடர்ந்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 2 பேரின் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த சிவராமபுரம் காவிரி கரை அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து திருடப்பட்ட ஒரு கருங்கல் பிள்ளையார் சிலை, 1,100 கிராம் எடையுள்ள பித்தளை பூஜை மணிகள், பித்தளை விளக்குகள் மற்றும் சிவராமபுரம் ராகவேந்திரா மடத்தில் இருந்து திருடப்பட்ட 8 கிலோ எடை, அரை அடி உயரம் கொண்ட வீர பிரம்மகோவிந்தம்மாள் உலோகச் சிலை, 15 கிலோ எடை கொண்ட தலை மற்றும் கைகள் துண்டிக்கப்பட்ட ராஜராஜேஸ்வரி அம்மன் சிலையையும் பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

மேலும் திருவாலாங்காடு மஞ்சலாற்றங்கரையில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து திருடப்பட்ட ஒரு அடி உயரமுடைய அய்யப்பன் பித்தளை சிலை, 4 பவுன் நகையையும், சிவராமபுரம் அக்ரஹாரத்தில் உள்ள நாராயணசாமி என்பவர் வீட்டில் திருடப்பட்ட 17.5 கிராம் எடை கொண்ட தங்க தாலி, குண்டு, நாணல்கள் ஆகியவற்றையும் போலீசார் மீட்டனர்.

இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயன், பாஸ்கர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, மீட்கப்பட்ட சாமி சிலைகள் மற்றும் நகைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து துரிதமாக செயல்பட்டு சிலைகளை மீட்ட தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.


Next Story