ரூ.43½ லட்சம் மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு
ரூ.43½ லட்சம் மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு
ஒரத்தநாடு அருகே 43.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான கோவில் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று மீட்டனர்.
கிருஷ்ணசாமி மடம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ளது ஆம்பலாப்பட்டு கிராமம். இங்குள்ள கிருஷ்ணசாமி மடத்திற்கு சொந்தமான நன்செய் நிலம் 0.14 சென்ட் மற்றும் புன்செய் நிலங்கள் 4.70 ஏக்கர் என 4.84 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தனி நபர்கள் ஆக்கிரமிப்புகளில் இருந்தது.
ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை மீட்க, இந்து சமய அறநிலையத்துறையால் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு, இடத்தை காலி செய்யுமாறு இந்து சமய அறநிலையத்துறை நோட்டீசு அனுப்பியது.
கோவில் நிலம் மீட்பு
ஆனால் நிலத்தை காலி செய்யாததால் நேற்று தஞ்சை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் (பொ) அனிதா தலைமையில், தஞ்சை கோவில் நிலங்கள் தனி தாசில்தார் சங்கர் முன்னிலையில், கோவில் செயல் அலுவலர் சக்திவேல், ஆய்வாளர் ஜெயசித்ரா மற்றும் கோவில் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.
மீட்கப்பட்ட நிலத்தில், அறிவிப்பு பலகை நடப்பட்டது. அதில் இது கோவிலுக்கு சொந்தமான இடம் என்றும் ஆக்கிரமிப்பு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டு இருந்தது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு மொத்தம், 43.60 லட்சம் ரூபாயாகும். தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, கோவில் சுவாதீனத்துக்கு எடுக்கப்பட்டுள்ளது.