யார் மீதும் குறிப்பிட்டு புகார் தெரிவிக்காமல் தாக்கல் செய்யப்படும் - ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
யார் மீதும் குறிப்பிட்டு புகார் தெரிவிக்காமல் தாக்கல் செய்யப்படும் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
யார் மீதும் குறிப்பிட்டு புகார் தெரிவிக்காமல் தாக்கல் செய்யப்படும் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஆட்கொணர்வு மனு
மதுரை புதூர் பகுதியைச்சேர்ந்த சுகுணாகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறியிருந்ததாவது:-
என் மகன் முரளிதரன் (வயது 32). அவரை கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி போலீசிலும் புகார் தெரிவித்தேன். இதுவரை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. எனவே என் மகனை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் தண்டபாணி, விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு உகந்ததல்ல
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர் மகன் கடந்த 21.12.2022 அன்று காணாமல் போய் உள்ளார். இதுபற்றிய புகாரின்பேரில் அவரை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. அவர் காணாமல் போனதற்கு, அப்போதைய நிலையில் எந்த காரணமும் இல்லை. அவரை யாரும் சட்டவிரோதமாக தடுத்து வைத்ததாக புகார்களும் தெரிவிக்கப்படவில்லை.
அதனால் யார் மீதும் குறிப்பிட்டு புகார் தெரிவிக்காதபோது, சட்டப்படி இந்த ஆட்கொணர்வு மனுவானது விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். ஆனாலும் மனுதாரரின் புகாரின்பேரில் அவரது மகன் காணாமல் போன வழக்கை 12 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.