ஊர்க்காவல் படை- கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு ஆட்கள் தேர்வுபோலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆய்வு


ஊர்க்காவல் படை- கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு ஆட்கள் தேர்வுபோலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆய்வு
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு ஆட்கள் தேர்வு நடந்தது. இதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர்

உடற்தகுதி தேர்வு

கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள (24 ஆண்கள்- 2 பெண்கள்) 26 பணியிடங்களுக்கும், கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு 10 பணியிடங்களுக்கும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த பணியிடங்களுக்காக 218 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நேற்று கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. இதில் ஒரு திருநங்கை, 10 பெண்கள் உள்பட 176 பேர் பங்கேற்றனர்.

தொடர்ந்து அவர்கள் தனித்தனியாக அமர வைக்கப்பட்டனர். அதையடுத்து அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம், மார்பு அளத்தல், உடல் எடை மற்றும் நேர்முகத் தேர்வு நடந்தது. கடலோர பாதுகாப்பு குழும பணிக்கு வந்தவர்களுக்கு கூடுதலாக நீச்சல் பயிற்சியும், கடற்கரை மணலில் 2 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயமும் நடத்தி, தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு, பணியில் அமர்த்தப்படுவர். இவர்களுக்கு மாதத்திற்கு 5 நாட்கள் பணி வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு ரூ.560 வீதம் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஊர்க்காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்தினருக்கான உடற்தகுதி தேர்வை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன், ஊர்க்காவல் படை வட்டார தளபதி அம்ஜத்கான், துணை வட்டார துணை தளபதி கலாவதி, கடலோர காவல் குழுமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருட்செல்வம், ஊர்க்காவல் படை சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம் மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் உடனிருந்தனர்.


Next Story