108 ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர் பணிக்கு தேர்வு

நெல்லையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர் பணிக்கு தேர்வு 20-ந்தேதி நடக்கிறது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ்களில் காலியாக உள்ள டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான தேர்வு வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் சமுதாய நலக்கூடத்தில் நடக்கிறது.
டிரைவர் பணியில் சேருவதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 24 முதல் 35 வயது இருக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் எடுத்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத் துறை நேர்காணல், கண்பார்வை மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு நடத்தப்படும்.
மருத்துவ உதவியாளர் பணியில் சேருவதற்கு பி.எஸ்சி. நர்சிங் அல்லது 12-ம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்பு படித்திருக்க வேண்டும். அல்லது பி.எஸ்சி. விலங்கியல், தாவரவியல், பயோவேதியியல், மைக்ரோபயாலஜி உள்ளிட்ட படிப்பு படித்து இருக்க வேண்டும். வயது 19 முதல் 30 வயது இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, மருத்துவ நேர்காணல் உள்ளிட்ட தேர்வு நடத்தப்படும்.
இந்த தகவலை நெல்லை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை ஒருங்கிணைப்பாளர் சோமநாதன் தெரிவித்துள்ளார்.






