செங்கோட்டை குண்டாறு அணை நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி


செங்கோட்டை குண்டாறு அணை நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 26 Sept 2023 12:15 AM IST (Updated: 26 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை குண்டாறு அணை நேற்று நிரம்பியது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை குண்டாறு அணை நேற்று நிரம்பியது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

குண்டாறு அணை

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாய பணிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருவது குண்டாறு அணையாகும். ஒருங்கிணைந்த நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முதன் முதலில் நிரம்பும் அணை இந்த அணைதான். சுமார் 1,200 ஏக்கர் பாசன பரப்பளவில் முப்போக சாகுபடி பணிகள் இப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

குண்டாறு அணையை நம்பி சுமார் 950 ஏக்கர் பரப்பளவில் நெல்சாகுபடி செய்யப்பட்டு வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர். இப்பகுதி விவசாயிகள். ஒவ்வொரு ஆண்டும் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் பெய்யும் மழையால் குண்டாறு அணை முழு கொள்ளளவை விரைவில் எட்டும். அவ்வாறு வெளியேறும் நீரினால் தஞ்சாவூர் குளம், செங்கோட்டை பகுதி குளங்கள், நல்லூர், பிரானூர், தென்கால்வாய், மெட்டு, மூன்றுவாய்க்கால், பிரானூர், கொட்டாகுளம் பகுதி விவசாயிகள் அதிகளவில் பயனடைவார்கள்.

2-வது முறையாக நிரம்பியது

ஏற்கனவே கடந்த ஜூலை மாதத்தில் பெய்த தென் மேற்கு பருவமழையால் அம்மாதம் 7-ந் தேதி குண்டாறு அணை நிரம்பியது. தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி வரை சுமார் 28 நாட்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது. இதன்முலம் பல குளங்கள் நிறைந்ததால் கார் சாகுபடி பணிகள் விரைவாக நடைபெற்றது. அதன் பின்னர் மழை குறைந்தது. அதனால் குண்டாற்றின் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்தது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பருவநிலை மாற்றத்தால் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இந்தாண்டில் நேற்று 2-வது முறையாக குண்டாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. அதில் இருந்து உபரி நீரானது வழிந்தோடி வருகிறது. இதனால் பிசான சாகுபடிக்கான நீர்வரத்து உறுதியான நிலையில் இந்த அணையை நம்பியுள்ள விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story