கலைஞர் மகளிர் உரிமை திட்ட புகார்களுக்கு விரைவில் தீர்வு


கலைஞர் மகளிர் உரிமை திட்ட புகார்களுக்கு விரைவில்   தீர்வு
x

சிவகாசியில் 3 நாட்களில் 700 பேர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட புகார்களுக்கு விைரவில் தீர்வு காணப்படும் என தாசில்தார் கூறினார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசியில் 3 நாட்களில் 700 பேர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட புகார்களுக்கு விைரவில் தீர்வு காணப்படும் என தாசில்தார் கூறினார்.

மகளிர் உரிமை திட்டம்

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி மகளிர் உரிமை தொகைத்திட்டம் கடந்த 15-ந்தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் தகுதி வாய்ந்த குடும்ப தலைவியின் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதில் தகுதியானவர்கள் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் செல்போனுக்கு குறுந்ததகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்த பலரது வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் செய்ய சிவகாசி தாலுகா அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட பெண்கள் தங்களது ஆதார் அட்டையுடன் வந்து புகார் செய்ய வலியுறுத்தப்பட்டது.

700 பேர்

இந்தநிலையில் இதுபோன்ற புகார்களை பெற சிவகாசி தாலுகா அலுவலகத்தில் 3 சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டு குடும்பத்தலைவிகளிடம் இருந்து புகார்கள் பெற்று பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அதில் குடும்ப தலைவி பெயர், செல்போன் எண், ஆதார் எண் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 700 குடும்ப தலைவிகள் தங்களது வங்கி கணக்கில் இதுவரை ரூ.1,000 உரிமைத்தொகை வரவு வைக்கப்படவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.

தகவல் தெரிவிக்கப்படும்

இதுகுறித்து சிவகாசி தாசில்தார் வடிவேல் கூறியதாவது,

கடந்த 3 நாட்களில் மட்டும் 700 பேர் சிறப்பு உதவி மையத்தில் புகார் செய்துள்ளனர். அவர்கள் பற்றிய விவரங்கள் பெறப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஏன் பணம் வங்கி கணக்கில் வந்து சேரவில்லை என்ற தகவலை கேட்டறிந்து பின்னர் அவர்களின் தொலைபேசியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

முதல் கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை சரி செய்து கொடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story