மக்கள் சுமை குறைப்பா? தேர்தல் எதிர்பார்ப்பா?
சமையல் கியாஸ் என்பது ஒரு நேரத்தில் வசதியானவர்கள் சமையலறைகளில் மட்டுமே இருந்து வந்தது. மத்திய, மாநில அரசுகளின் இலவச கியாஸ் இணைப்பு திட்டத்தின் விளைவாக ஏழைகளின் சமையலறைக்கும் அது இப்போது வந்துவிட்டது. கியாஸ் இல்லாமல் சமையலறைகள் இல்லை என்ற இலக்கை நோக்கி இன்றைக்கு நாம் நகர்ந்து வருகிறோம்.
அரசு மானியம்
முன்பு எல்லாம் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மத்திய அரசு கணிசமாக மானியத் தொகை வழங்கியதால் வெறும் ரூ.50, ரூ100 விலைக்குகூட சிலிண்டர் வாங்கிய காலம் உண்டு.
நாள் போக்கில் அந்த மானியத் தொகை குறைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு அனைவரும் சிலிண்டரை முழுத் தொகை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும், அவரவர் வங்கிக் கணக்கில் மானியத் தொகை வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அனைவரும் முழுத்தொகை கொடுத்து வாங்கும் மனநிலைக்கு வந்துவிட்டவுடன் மானியத்தை வங்கிகளில் செலுத்துவதை கொஞ்சம், கொஞ்சமாக அரசு நிறுத்திவிட்டது. இதனால் ரூ.1000-க்கு மேல் சிலிண்டரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு அனைவரும் தள்ளப்பட்டனர்.
விலை நிர்ணயம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி அடிப்படையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் விலை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியாகிறது.
அதேபோல், ஒவ்வொரு மாதமும் மாதத்தின் முதல் நாள் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.
வரவேற்பு
அந்த வகையில், கடந்த 1-ந்தேதி வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.92.50 குறைக்கப்பட்டு ரூ.1,852.50-க்கு விற்பனை செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. ஆனால் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 1,118 விலையில் விற்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு மாதம் பிறக்கும் போதும் வீட்டு சமையல் சிலிண்டர் விலை அதிகரித்துவிடுமோ? என்று இல்லத்தரசிகளுக்கு ஒருவித அச்சம் மேலோங்க இருந்து வந்தனர். இந்தநிலையில், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பரிசாக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்களின் சுமையை குறைக்கும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை இல்லத்தரசிகள் மனதார வரவேற்று உள்ளனர்.
குற்றச்சாட்டு
இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
எனவே இந்த திடீர் விலை குறைப்பு மக்களின் மாதாந்திர பட்ஜெட் சுமையை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதா? அல்லது எதிர்வரும் தேர்தலை மனதில்கொண்டு அறிவிக்கப்பட்டதா? என்பது குறித்து பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் கருத்து வருமாறு:-
அரியலூரை சேர்ந்த குடும்ப தலைவி செல்வராணி:- மத்திய அரசின் இந்த கியாஸ் விலை குறைப்பு இந்த ஆண்டு நடைபெற உள்ள மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களையும், 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையும் மனதில் கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ரூ.200 குறைப்பு என்றாலும், ஆளும் மத்திய அரசு ஆட்சிக்கு வரும்போது 410 ரூபாய் என்ற கணக்கில் தான் கியாஸ் விலை இருந்தது. கொரோனா காலத்தில் மக்களின் துயர் துடைக்கும் அரசாக இருக்க வேண்டிய காலகட்டத்தில் 2 மடங்காக கியாஸ் விலையை உயர்த்தி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இந்த மத்திய அரசு நடந்து கொண்டது. தற்போது கண் துடைப்பிற்காக தேர்தல்களை கணக்கில் கொண்டு இந்த விலை குறைப்பை செய்துள்ளது. இந்த விலை குறைப்பு மூலம் ஆளும் மத்திய அரசிற்கு எந்த பலனையும் ஏற்படுத்தாது. நடுத்தர குடும்பத்திற்கும் எந்த பலனும் இருக்காது.
தேர்தலுக்காக மட்டும் இல்லாமல்...
தலையாரிகுடிக்காட்டை சேர்ந்த கோமதி:- சமையல் கியாஸ் விலை குறைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததால் கியாஸ் விலை குறைந்துள்ளது என்பது இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி ஆகும். இன்னும் கொஞ்சம் குறைத்தாலும் நல்லது தான். மீண்டும் கியாஸ் விலை ஏற்றாமல் இருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையையும் குறைத்தால் நல்லது. இதனால் மற்ற பொருட்களின் விலையும் குறையும். குடும்பத்தின் செலவும் குறையும், பணத்தை சேமிக்கவும் முடியும்.
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூரை சேர்ந்த இல்லத்தரசி பாத்திமா:- மத்திய அரசின் இந்த விலை குறைப்பு வரவேற்கத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக சமையல் கியாஸ் விலை அதிகரித்து வந்தது இல்லத்தரசிகளுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி வந்தது. இதனால் ஏழைகள் சமையல் கியாசை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசு திடீரென கியாஸ் விலையை குறைத்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை குறைப்பு வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டும் இல்லாமல் தொடர்ந்து மானியம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
கிடுகிடுவென ஏற்றிவிட்டு...
வயலப்பாடியை சேர்ந்த இந்திராணி:- நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த எங்களைப்போன்றோருக்கு கியாஸ் விலை குறைந்தது மகிழ்ச்சி தான். இருந்தாலும் விலை ஏறும் போது மட்டும் கிடுகிடுவென ஏற்றிவிட்டு குறைக்கும் போது மட்டும் மிகக் குறைவான தொகையை குறைத்துள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது. அத்தியாவசியமான அனைத்து பொருட்களும் விலையேறியுள்ள இந்த சூழலில் சிலிண்டரின் விலையைப் பார்த்து விறகடுப்பிற்கு நிறைய பேர் மாறிவிட்டனர். வரும் வருமானத்தில் பெரும்பகுதி கியாசுக்கே செலவாகும் நிலை உள்ளது. ஆகவே எங்களைப்போன்றோரின் நிலையினை கருத்தில் கொண்டு மேலும் விலையினைக் குறைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.