மக்கள் சுமை குறைப்பா? தேர்தல் எதிர்பார்ப்பா?
மக்கள் சுமை குறைப்பா? தேர்தல் எதிர்பார்ப்பா? என்பது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்து வருமாறு:-
சமையல் கியாஸ் என்பது ஒரு நேரத்தில் வசதியானவர்கள் சமையலறைகளில் மட்டுமே இருந்து வந்தது. மத்திய, மாநில அரசுகளின் இலவச கியாஸ் இணைப்பு திட்டத்தின் விளைவாக ஏழைகளின் சமையலறைக்கும் அது இப்போது வந்துவிட்டது.
கியாஸ் இல்லாமல் சமையலறைகள் இல்லை என்ற இலக்கை நோக்கி இன்றைக்கு நாம் நகர்ந்து வருகிறோம்.
அரசு மானியம்
முன்பு எல்லாம் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மத்திய அரசு கணிசமாக மானியத் தொகை வழங்கியதால் வெறும் ரூ.50, ரூ.100 விலைக்குகூட சிலிண்டர் வாங்கிய காலம் உண்டு.
நாள் போக்கில் அந்த மானியத் தொகை குறைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு அனைவரும் சிலிண்டரை முழுத் தொகை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும், அவரவர் வங்கிக் கணக்கில் மானியத் தொகை வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அனைவரும் முழுத்தொகை கொடுத்து வாங்கும் மனநிலைக்கு வந்துவிட்டவுடன் மானியத்தை வங்கிகளில் செலுத்துவதை கொஞ்சம், கொஞ்சமாக அரசு நிறுத்திவிட்டது. இதனால் ரூ.1,000-க்கு மேல் சிலிண்டரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு அனைவரும் தள்ளப்பட்டனர்.
விலை நிர்ணயம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி அடிப்படையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் விலை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியாகிறது.
அதேபோல், ஒவ்வொரு மாதமும் மாதத்தின் முதல் நாள் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.
வரவேற்பு
அந்த வகையில், கடந்த 1-ந்தேதி வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.92.50 குறைக்கப்பட்டு ரூ.1,852.50-க்கு விற்பனை செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. ஆனால் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 1,118 விலையில் விற்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு மாதம் பிறக்கும் போதும் வீட்டு சமையல் சிலிண்டர் விலை அதிகரித்துவிடுமோ? என்று இல்லத்தரசிகளுக்கு ஒருவித அச்சம் மேலோங்க இருந்து வந்தனர். இந்தநிலையில், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பரிசாக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்களின் சுமையை குறைக்கும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை இல்லத்தரசிகள் மனதார வரவேற்று உள்ளனர்.
குற்றச்சாட்டு
இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
எனவே இந்த திடீர் விலை குறைப்பு மக்களின் மாதாந்திர பட்ஜெட் சுமையை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதா? அல்லது எதிர்வரும் தேர்தலை மனதில்கொண்டு அறிவிக்கப்பட்டதா? என்பது குறித்து பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் கருத்து வருமாறு:-
கொரோனா காலத்தில்...
நாமக்கல்லை சேர்ந்த சமூக ஆர்வலர் டி.எம்.மோகன் கூறியதாவது:-
வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டருக்கான விலை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மேலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சமையல் கியாஸ் சிலிண்டா்களின் விலை உயர்வானது சாதாரண மக்களை மிகவும் பாதிக்கும் முக்கிய பேசு பொருளாகும். ஏனெனில் சிலிண்டா்களின் விலையில் ஏற்படும் ஏற்ற, இறக்கம் சாதாரண குடிமகனின் சமையல் மற்றும் சமையல் அறையோடு தொடா்பு உடையது. தற்போது இந்தியாவில் ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் கியாஸ் சிலிண்டா் இணைப்பு உள்ளது.
எனவே சமையல் கியாஸ் சிலிண்டா்களின் விலையில் சிறிய மாற்றமோ அல்லது ஏற்றமோ ஏற்பட்டாலும், சாதாரண மக்கள் தான் அந்த பணச்சுமையை தாங்க வேண்டும். அப்படி உயர்த்தப்பட்ட சிலிண்டர் விலை மிக, மிக உச்சத்தில் இருந்தது. இப்பொழுது எண்ணெய் நிறுவனங்கள் ரூ.200 விலை குறைந்து இருப்பது சாதாரண மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
கச்சா எண்ணெய் விலை ஏற்ற, இறக்கத்திற்கு தகுந்தாற்போல் சிலிண்டர் விலை ஏற்றுவதாகவும், விலை இறக்குவதாகவும் கூறப்பட்டாலும் கடந்த சில ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை குறைந்தே காணப்படுகிறது. இந்த விலை குறைப்பை அரசு தலையிட்டு கொரோனா காலகட்டத்திலேயே செய்து இருக்க வேண்டும்.
ஏமாற்றும் செயல்
எலச்சிபாளையத்தை சேர்ந்த ஜெயமணி:-
மத்திய அரசு 9 ஆண்டுகாலம் கியாஸ் சிலிண்டருக்கான விலையை தொடர்ந்து உயர்த்தி கொண்டே இருந்தது. தற்போது ரூ.200 விலை குறைப்பு என்பது தேர்தலுக்காக குறைக்க வேண்டிய கட்டாயமோ என எண்ண தோன்றுகிறது. அடுத்தது எந்தெந்த பொருளுக்கு விலை ஏற்றம் செய்வார்கள் என தெரியவில்லை என பெண்கள் புலம்பி கொண்டிருக்கின்றனர்.
கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு ஒரு புறம் இருந்தாலும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் மறைமுகமாக மிக கடுமையாக விலை உயர்ந்து உள்ளது. தற்போது இதனை பெண்கள் மத்தியில் மறைப்பதற்காக கியாஸ் விலை குறைப்பு என்ற ஏமாற்று வேலையை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த விலை குறைப்பு மக்களை ஏமாற்றும் செயல் ஆகும்.
மகிழ்ச்சி
பரமத்திவேலூரை சேர்ந்த உமா:-
சமையல் கியாஸ் விலை உயர்வு என்பது ஒவ்வொரு மாதமும் பெரும் சுமையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு சமையல் கியாஸ் விலையை ரூ.200 குறைந்து இருப்பதை வரவேற்கிறோம். ரூ.1,000-ஐ தாண்டி விற்பனையான கியாஸ் சிலிண்டர் விலை இனி குறையும் என்கிற செய்தி மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
மளிகை பொருட்கள், எண்ணெய், காய்கறிகள், அரிசி என அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பு எங்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
ஆறுதலான விஷயம்
எருமப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணவேணி:-
கடந்த 10 ஆண்டுகளில் கியாஸ் சிலிண்டர் விலை ராக்கெட் வேகத்தில் ஏறி வந்தது. தற்போது தேர்தலை மனதில் கொண்டோ, என்னவோ சிலிண்டருக்கு ரூ.200 குறைத்து இருப்பது ஆறுதலான விஷயம் ஆகும். இன்னும் இதில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி விலையை கட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களை போன்ற கிராமப்புற பெண்களுக்கு கியாஸ் விலை உயர்வு என்பது பேரிடியாக இருக்கும். பல ஆண்டுகளுக்கு பிறகு ரூ.200 விலை குறைப்பு என்கிற செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. இனி ஒவ்வொரு மாதமும் கியாஸ் சிலிண்டர் வாங்கும்போது ரூ.200 மிச்சமாகும். அந்த பணத்தை நாங்கள் வேறு அத்தியாவசிய பொருட்கள் வாங்க பயன்படுத்தி கொள்வோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.