நீட் மசோதாவுக்கு கவர்னர் கையெழுத்திட மறுப்பது சட்டமன்ற சுதந்திரத்தை பறிக்கும் செயல்; ஜவாஹிருல்லா பேட்டி


நீட் மசோதாவுக்கு கவர்னர் கையெழுத்திட மறுப்பது சட்டமன்ற சுதந்திரத்தை பறிக்கும் செயல்; ஜவாஹிருல்லா பேட்டி
x
தினத்தந்தி 13 Aug 2023 6:45 PM GMT (Updated: 13 Aug 2023 6:46 PM GMT)

நீட் மசோதாவுக்கு கவர்னர் கையெழுத்திட மறுப்பது சட்டமன்ற சுதந்திரத்தை பறிக்கும் செயல் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

தென்காசி

கடையநல்லூர்:

நீட் மசோதாவுக்கு கவர்னர் கையெழுத்திட மறுப்பது சட்டமன்ற சுதந்திரத்தை பறிக்கும் செயல் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

பேட்டி

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஜனநாயக படுகொலை

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கான பல்வேறு துறைகளுக்கான அதிகாரிகளை நியமிப்பதற்காக வேண்டி ஒரு குழு அமைக்கப்படும்.

அந்த குழுவிலே 2 அரசு அதிகாரிகளும், அந்த மாநிலத்தினுடைய முதல்-அமைச்சரும் இருப்பார்கள் என்ற ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தின் முதல்-அமைச்சருக்கு எந்த வகையான அதிகாரமும் இல்லை என்று ஒரு ஜனநாயக படுகொலை இந்த சட்டத்தின் மூலமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

சுதந்திரத்தை பறிக்கும் செயல்

இதே அடிப்படையில் தான் தமிழக கவர்னர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாட்டுக்கு நீட் தேவையில்லை என்ற சட்டமுன் வடிவுக்கு கையெழுத்து போட மாட்டேன் என்று ஒரு வகையான சர்வாதிகாரியாக மாறி பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கக்கூடியது. இதுவும் ஒரு வகையில் தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் சுதந்திரத்தை பறிக்கக்கூடிய செயலாக இருக்கிறது.

கடையநல்லூரில் மாநிலத்திலேயே தமிழ் வழியில் படித்து அதிகபட்சமான மதிப்பெண்களை பெற்ற சப்ரினா இமாமா என்ற ஒரு மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் விரக்தியில் கல்லூரி படிப்பு வேண்டாம் என்ற நிலைக்கு செல்லக்கூடிய ஒரு சூழல் இங்கே ஏற்பட்டு இருக்கிறது.

வரவேற்கிறோம்

நாங்குநேரியில் மாணவருக்கு அரிவாள் வெட்டு சம்பவத்தில் முதல்-அமைச்சர் தலையிட்டு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுத்ததை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநிலச் துணை பொதுச்செயலாளர் மைதீன் சேட்கான், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல் ரகுமான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் முகமது பாசித், கடையநல்லூர் நகர தலைவர் முகமது பஸ்லி, நகர செயலாளர் ரகுமத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story