நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் வாங்க மறுப்பு
நேரடி கொள்முதல் நிலையங்களில் ஏ.டி.டி. 37 ரக நெல்லை வாங்க மறுப்பதாக குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
குறைதீர்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் சுமதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு குறை மற்றும் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு பெய்த கனமழையினால் கீழ்வீதி, வேப்பேரி உள்ளிட்ட கிராமங்களில் சாலைகள் மிகவும் சேதமடைந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஏரி கால்வாய், குளம், குட்டைகள் முறையாக தூர்வாராததால் மழைநீரை சேமிக்க முடியாமல் தொடர்ந்து வீணாகி வருகிறது.
நெல் வாங்க மறுப்பு
சென்னை- பெங்களூரு விரைவு சாலை பணிக்காக ஏரிகளிலிருந்து விதிமுறைகளை பின்பற்றாமல் மண் எடுக்கப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும். விவசாயிகள் விளைவித்த ஏ.டி.டி. 37 ரக நெல்லை கொள்முதல் நிலையங்களில் வாங்க மறுக்கிறார்கள். இந்த நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும் எவ்வளவு நெல் சாகுபடி செய்கிறார்கள் என்ற புள்ளிவிவரங்களை விவசாயிகளாகிய எங்களுக்கு வழங்கவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். இதில் சமூக பாதுகாப்பு தாசில்தார் ஆனந்தன், தலைமையிடத்து தாசில்தார் பன்னீர்செல்வம், மண்டல துணை தாசில்தார் பாஸ்கரன், வேளாண்மை துறை அலுவலர் அருணாகுமாரி, விவசாய சங்க பிரதிநிதிகள் சுபாஷ், பிரகாசம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.