பஸ், கடைகளில் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பு


பஸ், கடைகளில் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பு
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பஸ், கடைகளில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் பொதுமக்கள் புலம்பி தவிக்கின்றனர்.

திண்டுக்கல்

நாணயங்கள்


பண்டமாற்று முறை மாறி நாணயங்கள் பயன்பாட்டுக்கு வந்ததால் வணிகமும், பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்தன. நாகரிகம், காலத்தின் மாற்றத்தால் நாணயங்களுடன், ரூபாய் நோட்டுகளும் புழக்கத்துக்கு வந்தன. ரூபாய் நோட்டுகள் பலவித வண்ணங்களில் புழக்கத்துக்கு வந்த பின்னர், சட்டை பையில் நாணயங்கள் வைத்திருப்போரின் எண்ணிக்கை குறைந்தது.


ரூபாய் நோட்டுகளை மடித்து வைப்பதால் கிழிந்து விடும். ஆனால் நாணயங்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறாமல் அப்படியே இருக்கும்.


பத்து ரூபாய் நோட்டாக இருந்தாலும், நாணயமாக இருந்தாலும் பணத்தின் மதிப்பு ஒன்று தான். அதை ஒருசிலரின் மனம் ஏற்கவில்லை. அதன் விளைவு ஒருகட்டத்தில் 'சில்லரை' என திட்டுவதற்கு பயன்படுத்தும் நிலைக்கு சென்று விட்டது.


10 ரூபாய் நாணயம்


எனினும் ரிசர்வ் வங்கி சார்பில் 20 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய், 1 ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் விட்டுள்ளன. அதில் 5 ரூபாய், 10 ரூபாய் நாணயங்களை அதிகம் பயன்படுத்த வேண்டியது ஏற்படும். அதிலும் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்துக்கு வந்ததும், மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கினர்.


நாடு முழுவதும் 10 ரூபாய் நாணயங்கள் அதிகம் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த 10 ரூபாய் நாணயங்கள் அதிக எடை கொண்டவை. எனவே 100 ரூபாய்க்கு, 10 ரூபாய் நாணயங்களை வைத்திருந்தால், சட்டைப்பை கனமாக மாறிவிடும். அந்த அளவுக்கு 10 ரூபாய் நாணயங்கள் உறுதியானது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக 10 ரூபாய் நாணயங்களை பல்வேறு பகுதிகளில் வாங்க மறுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.


வாங்க மறுப்பு


அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவது இல்லை என்பது பொதுமக்களின் புகாராக இருக்கிறது. வங்கிகள், பஸ்கள், மளிகை கடைகள், ஓட்டல், டீக்கடைகள், பெட்டிக்கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவது இல்லை என்கின்றனர்.


இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் பலமுறை அறிவுரை வழங்கினாலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது தொடர்கிறது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-


பஸ்சில் வாங்குவதில்லை


நர்சிங் மாணவி பவுனுதாய் (சின்னாளப்பட்டி):- நான் தினமும் திண்டுக்கல்லுக்கு பஸ்சில் தான் வந்து செல்கிறேன். 10 ரூபாய் நாணயத்தை டிக்கெட் எடுப்பதற்கு கொடுத்தால் வாங்குவது இல்லை. 10 ரூபாய் நோட்டாக கொடுத்தால் தான் வாங்குகின்றனர். பஸ்சில் மட்டுமின்றி எந்த கடையில் கொடுத்தாலும் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவது இல்லை.


பஸ் கண்டக்டர் நாகராஜ்:- வங்கியில் பணம் செலுத்த சென்றால் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவது இல்லை. பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பஸ்சுக்கு டீசல் நிரப்ப சென்றால் அங்கும் வாங்குவது இல்லை. இதனால் வேறுவழியின்றி பயணிகளிடம் 10 ரூபாய் நாணயத்துக்கு பதிலாக ரூபாய் நோட்டுகளை கேட்கிறோம். அதிலும் சிலர் 10 ரூபாய் நாணயங்களை தவிர வேறு இல்லை என்று கூறுவார்கள். இதுபோன்ற நபர்களிடம் வாங்கிய நாணயங்கள் ஏராளமாக என்னிடம் இருக்கின்றன. அனைத்து இடங்களிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்கினால் நன்றாக இருக்கும்.


கடைகளில் மறுப்பு


சதீஷ்செல்வராஜ் (கொடைரோடு):- கொடைரோடு பகுதியில் கடைகள், ஓட்டல்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவது இல்லை. அதுபற்றி கடைக்காரர்களிடம் கேட்டால் செல்லாது என்று கூறுகின்றனர். ஒவ்வொரு முறையும் கடைகளில் அவ்வாறு கூறுவதால், வேறுவழியின்றி 10 ரூபாய் நாணயங்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டியது ஏற்படுகிறது. 5 ரூபாய் நாணயத்தை மட்டும் வாங்குகின்றனர். இதுபற்றி யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லை. இதற்கு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கல்லூரி மாணவி சங்கீதா (நரசிங்கபுரம்):- பஸ்சில் டிக்கெட் எடுக்க 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தால் வாங்க மறுக்கின்றனர். கல்லூரிக்கு செல்லும் அவசரத்தில் மறந்து நாணயத்தை எடுத்து சென்று விட்டால் சிரமமாகி விடுகிறது. மளிகை கடை மட்டுமின்றி எந்த கடையிலும் நாணயத்தை வாங்குவதில்லை. இதனால் நாங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.


தமிழரசி (வடமதுரை) :- கடைகளில் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தால் வாங்க மறுப்பதோடு, ஏளனமாக பார்க்கின்றனர். வங்கிகளிலேயே வாங்க மறுப்பதால், கடைக்காரர்களும் தைரியமாக மறுத்துவிடுகின்றனர். அரசு அச்சடித்து வெளியிட்ட நாணயத்தை வாங்க மறுப்பது, வேதனையாக இருக்கிறது. வங்கிகள், பஸ்கள், கடைகளில் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மளிகைக்கடைகாரர் வேல்முருகன் (திண்டுக்கல்):- 10 ரூபாய் நாணயத்தை வாங்குவது குறித்து பொதுமக்களிடம் தெளிவு இல்லை. வாடிக்கையாளர்களில் பலர் 10 ரூபாய் நாணயத்தை வாங்க தயங்குகின்றனர். இதனால் ஒருவரிடம் வாங்கிய நாணயத்தை மற்றவர்களிடம் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே 10 ரூபாய் நாணயம் தொடர்பாக மக்களிடம் இருக்கும் சந்தேகத்தை தீர்க்க வேண்டும்.


இவ்வாறு அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.



Next Story