முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு வீடியோ பரப்பிய அ.தி.மு.க. நிர்வாகி கைது
முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு வீடியோ பரப்பியதாக அ.தி.மு.க. நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு வீடியோ பரப்பியதாக அ.தி.மு.க. நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்-அமைச்சர் குறித்து அவதூறு
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, எதிர்கட்சியினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் குறித்து பல்வேறு மீம்ஸ், வீடியோக்களை சமூக வலைதளத்தில் பரப்பி வருகிறார்கள். இதில் சிலர் அவதூறான வீடியோக்களை பரப்பியதாக கூறி கைது நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு வீடியோ பரப்பியதாக கிடைத்த புகாரின் பேரில் போலீசார் நேற்று அவரை பிடித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்து வந்ததாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி, முன்னாள் எம்.பி. செல்வகுமார சின்னையன் மற்றும் அ.தி.மு.க.வினர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வாலிபர்
இதுதொடர்பாக போலீசாரால் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நபர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
மேலும் இதுபற்றி போலீசார் கூறுகையில், 'ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 24). இவர் ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார். நேற்று முன்தினம் இவரது செல்போனுக்கு வந்த ஒரு வீடியோ, முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறான தகவல் பரப்புவதாக இருந்தது.
அதனை சிறிது மாற்றம் செய்து, தனது பெயரையும் கவுதம் சேர்த்து மற்றவர்களுக்கு அனுப்பி உள்ளார். அந்த வீடியோ பல்வேறு தரப்புக்கு சென்ற நிலையில், ஈரோடு சைபர் கிரைம் போலீசார் நேற்று கவுதமை, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறோம்,' என்றனர்.
வாக்குவாதம்
இதுதொடர்பாக அங்கு குவிந்திருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறும்போது, 'கடந்த 2 நாட்களாக பல்வேறு மீம்ஸ்கள், வீடியோக்கள் பரவி வருகிறது. அதில் குறிப்பிட்ட நபர்களை மட்டும் கைது செய்வது தவறானது. அவர் எந்த வீடியோவையும் தயாரித்து வெளியிடவில்லை. அவருக்கு வந்த வீடியோவை மற்றவர்களுக்கு அனுப்பி உள்ளார். எனவே அவரை போலீசார் பிடித்து வந்திருப்பது கண்டிக்கத்தக்கது.
அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்' என்றனர். இதற்கிடையே கவுதமின் பெற்றோர் அங்கு வந்தனர். அப்போது மகனை பார்க்க அவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோஷங்கள்
இதைத்தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ஆறுமுகம், சேகர் ஆகியோர் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறும்போது, 'முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு வீடியோ வெளியிட்ட கவுதம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார். எனவே நீங்கள் அனைவரும் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள். இல்லையென்றால் உங்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.வினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவு வாயில் பகுதியில் நின்று கொண்டு, முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.