புகையிலை தடுப்பு சட்டம் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
தேனியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில், புகையிலை தடுப்பு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.
தேனி,
தேனியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில், புகையிலை தடுப்பு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு சுகாதாரத்துறை துணை இயக்குனர் போஸ்கோ ராஜா தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில், பள்ளி, கல்லூரிகளில் இருந்து 300 அடி சுற்றளவில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்றும், பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுக்க அபராதம் விதிப்பதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்றும் ஆலோசனை நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த மாதம் வரை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி அருகில் உள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 12 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் காலங்களில் மேலும் தொடர் நடவடிக்கை எடுப்பது என்றும் ஆலோசிக்கப்பட்டு பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் போலீஸ் துறை, வருவாய்த்துறை, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.