ஓட்டப்பிடாரம் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்தது தொடர்பாக பள்ளிக்கூடத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.


தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்தது தொடர்பாக பள்ளிக்கூடத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக பள்ளிக்கூடத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மாணவி தற்கொலை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எஸ்.அண்டகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன் மகள் வைத்தீஸ்வரி (வயது 17). இவர் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி இருந்து பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று முன்தினம் பள்ளிக்கூடத்தில் உள்ள கழிப்பறையில் வைத்தீஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெற்றோர் புகார்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு விரைந்து வந்தனர். வைத்தீஸ்வரி உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பசுவந்தனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர்.

அமைச்சர் விசாரணை

இந்த நிலையில் நேற்று அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி மற்றும் அதிகாரிகள், மாணவியின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் முடிவு எடுக்கப்படும். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர் வைத்தீஸ்வரி தற்கொலை செய்து கொண்ட இடத்தை அமைச்சர், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். பள்ளி வளாகத்தையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

உடல் ஒப்படைப்பு

பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறுகையில், 'மாணவி வைத்தீஸ்வரி மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை நடத்த பரிந்துரைக்கப்படும். அந்த மாணவி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்ததாக தெரிகிறது. அது முறையாக காவல்துறை விசாரணையில் உள்ளது' என்றார். தொடர்ந்து மாணவியின் பெற்றோரை சந்தித்து அமைச்சர் ஆறுதல் கூறினார்.

இதனையடுத்து நேற்று மாலை 4 மணி அளவில் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் வைத்தீஸ்வரி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

மேலும், அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து பசுவந்தனை போலீசார் வழக்கு சம்பந்தமான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

நேற்று மாலையே சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு ராஜ்குமார் தலைமையிலான போலீசார் பள்ளிக்கூட வளாகத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.


Next Story