கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் உதவித்தொகைக்கான அனைத்து விண்ணப்பங்களும் பதிவு; ரேஷன் கடை பணியாளர்களுக்கு கண்காணிப்பு அலுவலர் அறிவுரை


கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் உதவித்தொகைக்கான அனைத்து விண்ணப்பங்களும் பதிவு; ரேஷன் கடை பணியாளர்களுக்கு கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
x

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் உதவித்தொகைக்கான அனைத்து விண்ணப்பங்களும் பதிவு செய்ய வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

திருச்சி

மகளிர் உரிமை திட்டம்

திருச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்துவது குறித்து அரசுத்துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் எம்.சத்தியபிரியா, மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.அபிராமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலா பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை அரசு முதன்மைச்செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் க.மணிவாசன் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

2 கட்ட முகாம்

திருச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க இரு கட்டங்களாக முகாம்கள் நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்பப்பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி முதல் வருகிற 4-ந்தேதி வரையும், இரண்டாம் கட்ட முகாம் வருகிற 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும் நடைபெறவுள்ளது.

முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். அனைத்து விண்ணப்பங்களையும் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து முகாம் நாட்களிலும் காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடத்த வேண்டும். விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் செல்போன் எண் இணைக்கப்பட்டு இருந்தால், அந்த செல்போனை முகாமிற்கு எடுத்து வருவது விண்ணப்ப பதிவை எளிமைப்படுத்தும் என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு

இதைத்தொடர்ந்து, கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமை அவர் நேரில் பார்வையிட்டார். பின்னர் லால்குடி தாலுகா நெருஞ்சலக்குடி பகுதியில் பொதுமக்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணியை ஆய்வு செய்ததுடன், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். பின்னர் வாளாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள முகாமை பார்வையிட்டார்.

மணப்பாறை, தா.பேட்டை

மணப்பாறை தாலுகா பகுதியில் நேற்று டோக்கன் மற்றும் விண்ணப்பம் வழங்கும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி மொத்தமுள்ள 119 கடைகளுக்கு உட்பட்ட 73,149 குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பம் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த விண்ணப்பம் வழங்கும் பணி 3 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. தா.பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் அந்த திட்டத்தில் விண்ணப்ப படிவங்களை எந்த மையத்தில் வழங்க வேண்டும் என்பது குறித்த டோக்கன் உள்ளிட்டவற்றை வீடு, வீடாக ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.


Next Story