அவினாசி பத்திரப்பதிவு அலுவலர் பணியிடை நீக்கம்
அவினாசி பத்திரப்பதிவு அலுவலர் பணியிடை நீக்கம்
அவினாசி
அவினாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்க சான்று பெற ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட பத்திரப்பதிவு அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பத்திரப்பதிவு அலுவலகம்
திருப்பூர் மாவட்டம் அவினாசி பழைய பஸ் நிலையம் அருகில் பத்திர பதிவு அலுவலகம் உள்ளது அவினாசி சுற்றுவட்டாரத்தில் உள்ள 31 ஊராட்சி பகுதிகளில் நிலம், வீடு, இடம், வாங்க விற்க பொதுமக்கள் இந்த பத்திர பதிவு அலுவலகத்திற்கு வருகின்றனர். இந்த அலுவலகத்தில் தினமும் நூற்றுக்கணக்கான பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் பத்திரப்பதிவு நடக்கும் அலுவலகங்களில்அவினாசி பத்திர பதிவு அலுவலகமும் ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில் அவினாசியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் கருவலூரை சேரந்த ஒருவர் வில்லங்க சான்று பெற அலுவலக தலைமை எழுத்தர் தனபாலிடம் விவரம் கேட்டுள்ளார். அதற்கு தலைமை எழுத்தர் தனபால் அலுவலக கட்டணம் ரூ.121 என்றும், ஒரு வில்லங்க சான்று பெற ரூ. 1000 செலவாகும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆவணத்தில் 20 பக்கங்கள் இருப்பதால் அதற்கு குறைந்தபட்சம் ரூ. 10ஆயிரம் வேண்டும் என கேட்டுள்ளார்.
பணியிடை நீக்கம்
அப்போது அந்த நபர் வீட்டுக்கு சென்று பணம் எடுத்து வருவதாக கூறி சென்று விட்டார். இந்த உரையாடல் குறித்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதுகுறித்து அவினாசி சார் பதிவாளரிடம் கேட்டபோது இது தொடர்பாக எங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை. இருப்பினும் இதுகுறித்து எங்களது மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்றனர். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வந்த வீடியோக்களின் அடிப்படையில் தலைமை எழுத்தர் தனபாலை பணியிடை நீக்கம் செய்து கோவை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்