மாவட்டத்தில், இதுவரை 10,406 விவசாயிகள் வேளாண் திட்டத்தில் பதிவு இணை இயக்குனர் தகவல்


மாவட்டத்தில், இதுவரை 10,406 விவசாயிகள் வேளாண் திட்டத்தில் பதிவு  இணை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 406 விவசாயிகளின் விவரங்கள் மட்டுமே வேளாண் அடுக்கு திட்டத்தின் மூலம் இணையதளத்தில் பதிவு செய்துள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 406 விவசாயிகளின் விவரங்கள் மட்டுமே வேளாண் அடுக்கு திட்டத்தின் மூலம் இணையதளத்தில் பதிவு செய்துள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

வேளாண் அடுக்கு திட்டம்

சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

வேளாண் அடுக்கு திட்டத்தின் மூலம் அனைத்து சாகுபடி நிலவிவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் விவரம், நில உடைமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல் மற்றும் நிலஉடைமை வாரியாக பயிர் சாகுபடி விவரம் ஆகிய அடிப்படை விவரங்களைக் கொண்டு கிரெய்ன்ஸ் என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் விவசாயிகள் பெரிதும் பயனடையும் வகையில் செயலாற்றும் வருவாய், வேளாண் துறை, பேரிடர் மேலாண்மை, கூட்டுறவு, பட்டுவளர்ச்சி, உணவு வழங்கல், கால்நடைபராமரிப்பு உள்பட 13 துறைகள் இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதி செய்யமுடியும்.

ஒற்றை சாளர இணையதளமாக செயல்படுவதால் ஒரே இடத்தில் பதிவு செய்வதன் மூலம் அனைத்து துறைகளிலும் விவசாயிகள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் இதுவரை பெற்ற நலத்திட்ட உதவிகளை நேரடியாக தெரிந்து கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு முறையும் பயன்பெற விண்ணப்பிக்கும் போது விவசாயிகள் ஆவணங்களை சமர்பிக்க வேண்டியதில்லை.

பயனடையலாம்

அத்துடன் விவசாயிகள் நேரடியாக இணையதளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெற்றுக் கொள்ள முடியும். மேலும் நிதிசார்ந்த நலத்திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும்.

சிவகங்கை மாவட்டத்தில் 7 லட்சத்து 80 ஆயிரத்து 195 சர்வே எண்களுக்கு நில உரிமையாளர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்யவேண்டிய நிலையில், இதுவரை 10ஆயிரத்து 406 சர்வே எண்களுக்கான உரிமையாளர்களின் விவரங்கள் மட்டுமே கிரெய்ன்ஸ் இணையதளத்தில் பதிவுசெய்துள்ளார்கள். ஆதலால், விடுபட்ட விவசாயிகள் உடனடியாக தங்களது ஆதார் கார்டு நகல், புகைப்படம், வங்கிகணக்கு புத்தக நகல் மற்றும் நிலப்பட்டா ஆவணநகல் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அல்லது உதவி வேளாண்மை அலுவலர் அல்லது உதவி தோட்டக்கலை அலுவலரிடம் ஒப்படைத்து, கிரெய்ன்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதிசெய்து, அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story