விண்ணப்ப வினியோக பணிகளை பதிவாளர் ஆய்வு
விண்ணப்ப வினியோக பணிகளை பதிவாளர் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதனையொட்டி கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் அனைத்து மாவட்டங்களுக்கும் கூடுதல் பதிவாளர் அளவில் கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளார். இதன் மூலம் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள், டோக்கன் வழங்குதல், சேமிப்பு கணக்கு இல்லாத குடும்ப தலைவிகளுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் புதிய கணக்குகள் தொடங்குதல் உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் பதிவாளர் சிவமலர் ரேஷன்கடை விண்ணப்பங்கள் வழங்குதல், மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் புதிய கணக்குகள் தொடங்குவது போன்ற பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை செயல்படும் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக புதிய கணக்குகள் தொடங்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வங்கியின் 32 கிளைகளிலும் கணக்குகள் தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சேமிப்பு கணக்கு தொடங்க விரும்புபவர்கள் 2 பாஸ்போர்ட்டு அளவு புகைப்படம், ரேஷன்கார்டு நகல், ஆதார் அட்டை நகல் போன்றவற்றுடன் அருகில் உள்ள கூட்டுறவு வங்கி கிளைகளுக்கு சென்று கணக்கு தொடங்கலாம் என்று தெரிவித்தார். ஆய்வின்போது கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர், பொது வினியோக திட்ட துணை பதிவாளர் மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.