யாசகம் எடுத்து வந்த 5 பேருக்கு மறுவாழ்வு
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் யாசகம் எடுத்து வந்த 5 பேருக்கு மறுவாழ்வாக ஆதரவற்ற இல்லத்தில் போலீசார் சேர்த்தனர்.
விழுப்புரம்;
விழுப்புரம் ரெயில் நிலைய நடைமேடைகள் மற்றும் ரெயில் நிலைய வளாகத்தில் ஆதரவற்ற முதியோர்கள் பலர், யாசகம் எடுத்து சாப்பிட்டு அங்கேயே படுத்து தூங்கி வருகின்றனர். அவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் வகையில் விழுப்புரம் ரெயில்வே போலீசார் தற்போது இறங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று ரெயில்வே நிலையத்தில் சுற்றித்திரிந்த சேலம் ஆட்டியாம்பட்டியை சேர்ந்த பூபதி, விழுப்புரம் ஊரல் தெருவை சேர்ந்த பழனி, சித்தேரிக்கரை மஜித், மதுரை காலவாசல் பகுதியை சேர்ந்த ரவிபிரகாஷ், விழுப்புரம் கோலியனூரான் வாய்க்கால் தெருவை சேர்ந்த காசிலிங்கம் ஆகிய 5 பேரை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன், போலீசார் சாமுண்டீஸ்வரி, இளையராணி, சுதா, வீரபாலன் உள்ளிட்டோர் மீட்டனர். பின்னர் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் 5 பேரையும் குளிக்க வைத்து அவர்களுக்கு புதிய ஆடைகள் வாங்கிக்கொடுத்ததோடு உணவு வழங்கினர். தொடர்ந்து, அவர்கள் 5 பேரையும் விழுப்புரம் அருகே குண்டலப்புலியூரில் உள்ள முதியோர் இல்லத்தில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.