தென்பெரம்பூரில் உள்வாங்கிய ஜம்பு காவிரி வாய்க்கால் சீரமைப்பு
தஞ்சை அருகே தென்பெரம்பூரில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஜம்புகாவிரி வாய்க்காலில் உள்வாங்கிய பகுதி சீரமைக்கப்பட்டதையடுத்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருக்காட்டுப்பள்ளி:
தஞ்சை அருகே தென்பெரம்பூரில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஜம்புகாவிரி வாய்க்காலில் உள்வாங்கிய பகுதி சீரமைக்கப்பட்டதையடுத்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஜம்புகாவிரி வாய்க்கால்
தஞ்சை அருகே தென்பெரம்பூர் அணையிலிருந்து வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகியவை பிரிகின்றன. இவற்றில் வெண்ணாற்றின் ஓரத்தில் சிறிய அளவில் ஜம்பு காவிரி என்ற பாசனவாய்க்கால் பிரிகிறது. இதன்மூலம் ஏறத்தாழ 7 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜம்பு காவிரி மதகுகளை ஒட்டியுள்ள பகுதியில் வாய்க்கால் திடீரென உள்வாங்கியது.
இதனால் ஜம்புகாவிரி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இந்த வாய்க்கால் 1873-ம் ஆண்டு கட்டப்பட்டது. தண்ணீர் நிறுத்தப்பட்டதால் மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குறுவை நடவு செய்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து உடைப்பை தற்காலிகமாக சீரமைத்து, பாசனத்துக்கு தண்ணீர் விடும் முயற்சியில் வெண்ணாறு கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
தற்காலிகமாக சீரமைப்பு
அதன்படி தற்காலிகமாக 50 மீட்டர் நீளத்துக்கு உள்வாங்கிய வாய்க்காலின் தரைதளம் மற்றும் கரை பகுதிகள் சீரமைக்கப்பட்டன. இதையடுத்து வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டன. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாய்க்கால் உள்வாங்கியதையடுத்து அந்த பணிகள் சீரமைக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.