மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிப்பா?. நிலையை அறிய மையங்களில் குவிந்த இல்லத்தரசிகள்


மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிப்பா?. நிலையை அறிய மையங்களில் குவிந்த இல்லத்தரசிகள்
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:47 PM GMT)

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிப்பா?, இல்லையா? என்பதை அறிய மையங்களில் இல்லத்தரசிகள் குவிந்தனர். தகுதி இருந்தால் 30 நாளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறினார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள பெரும்பான்மையான பயனாளிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1,000, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. உரிமைத்தொகை குறித்த குறுஞ்செய்தி வரப்பெறாதவர்கள் மற்றும் குறுஞ்செய்தி வரப்பெற்று வங்கிக்கணக்கில் பணம் வரவில்லை என தெரிவிப்பவர்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் ஆதார் பதிவு செய்துள்ள செல்போன் எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகி விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

மேலும் விண்ணப்பங்கள் குறித்த தகவல் பெறுவதற்கு அனைத்து தாலுகா அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை குறித்த குறுஞ்செய்தி வரப்பெறாதவர்கள் மற்றும் குறுஞ்செய்தி வரப்பெற்று வங்கிக்கணக்கில் பணம் வராதவர்கள் நேற்று தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள இ- சேவை மையங்கள் மற்றும் உதவி மையங்களுக்கு சென்று தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்த விவரங்களை அறிந்துகொண்டனர்.

இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை நேற்று காலை மாவட்ட கலெக்டர் சி.பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

38 உதவி மையங்கள்

அப்போது கலெக்டர் சி.பழனி, நிருபர்களிடம் கூறுகையில், மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள், அவர்கள் விண்ணப்பித்த விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ள வசதியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 5 உதவி மையங்களும், 9 தாலுகா அலுவலகங்களில் தலா 3 உதவி மையங்களும், விழுப்புரம் கோட்டாட்சியர், திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் தலா 3 உதவி மையங்களும் ஆக மொத்தம் 38 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு தகுதியிருந்தும் நிராகரிக்கப்பட்டிருப்பதாக கருதினால் இ-சேவை மையத்திலேயே மேல்முறையீடு செய்து கொள்ளலாம். இ-சேவை மையங்கள் மூலமாக பெறப்படும் மேல்முறையீட்டு மனுக்கள் கோட்டாட்சியர், சப்-கலெக்டர் ஆகியோரால் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு தகுதியிருப்பின் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ், கலைஞர் மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் நாராயணமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story