விளாத்திகுளம் தனியார் ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை

இளம்பெண் திடீரென உயிரிழந்ததை தொடர்ந்து விளாத்திகுளம் தனியார் ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
எட்டயபுரம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதமுத்தூரைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 23). இவர் கோவையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கும் விளாத்திகுளம் அருகே கோட்டநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாரீஸ்வரிக்கும் (20) கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் கணவன்-மனைவி 2 பேரும் கோவையில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாரீஸ்வரியை சொந்த ஊரான விளாத்திகுளம் அருகே கோட்டநத்தத்துக்கு குடும்பத்தினர் அழைத்து வந்தனர். பின்னர் விளாத்திகுளம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த மாதம் 4-ந்தேதி அறுவை சிகிச்சையில் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் பெற்றோர் வீட்டில் குழந்தையுடன் வசித்த மாரீஸ்வரிக்கு கடந்த மாதம் 16-ந்தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து விளாத்திகுளம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவரை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மாரீஸ்வரி சிகிச்சை பலனின்றி கடந்த 25-ந்தேதி பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் விளாத்திகுளம் தனியார் ஆஸ்பத்திரியை நேற்று உறவினர்கள் முற்றுகையிட்டனர். மாரீஸ்வரிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்றும், அவரது மருத்துவ விவரங்கள் கேட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரசோலை மற்றும் போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும், தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர், மாரீஸ்வரிக்கு சிகிச்சை அளித்த மருத்துவ விவரங்களை தருவதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்ைத கைவிட்ட உறவினர்கள் கலைநது சென்றனர்.






